​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்

Published : Dec 07, 2019 6:52 AM



உயரும் ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்

Dec 07, 2019 6:52 AM

ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் உணவுப் பொருட்கள், ஆடைகள், விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017ம் ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுக்கு சராசரியாக 14 புள்ளி 4 சதவீத வருவாய் கிடைத்து வந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக 11புள்ளி 6 சதவீதமாக குறைந்திருப்பதால் அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு வழங்கும் 13 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மாதாந்திர இழப்பீடு தொகை மத்திய அரசுக்கு சுமையாக இருந்து வருகிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்ட ஜிஎஸ்டி வரிகளை உயத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி அடிப்படையான 5 சதவீத வரி இனி பத்து சதவீதமாக உயர்த்தப்படும். தற்போது 243 பொருட்களுக்கு வசூலிக்கப்படும் 12 சதவீத வரி இனி 18 சதவீத வரையறைக்குள் கொண்டு வரப்படும். வரி உயர்த்தப்பட்டால் மாவு வகைகள், பன்னீர், பருப்பு வகைகள், பாமாயில், பிசா , உலர் பழங்கள், போன்ற உணவுப் பொருட்களின் விலை உயரும். அதே போல் உணவகங்களில் கட்டணம் அதிகமாகும். முதல் வகுப்பு ரயில் விமான கட்டணங்களும் உயரக்கூடும். பட்டு, லினன் துணிகள், ஆண்களின் கோட்டு சூட்டுகள், சுற்றுலா சேவைகள், மொபைல் போன்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான வரி இருமடங்காக உயர்த்தப்படும்

இதனால் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

வரிவிலக்கு அளிக்கப்பட்டு வரும் சில பொருட்களுக்கு வரிவிதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட ஓட்டல்களில் தங்குவது போன்றவற்றுக்கு இனி வரி செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்து அடுத்த வாரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த உள்ளது. இதையடுத்து வரிவிதிப்பில் மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.