​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐதராபாத்தில் தீபாவளி... போலீசாருக்கு குவிகிறது பாராட்டு...

Published : Dec 06, 2019 5:19 PM

ஐதராபாத்தில் தீபாவளி... போலீசாருக்கு குவிகிறது பாராட்டு...

Dec 06, 2019 5:19 PM

ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரை சுட்டுக் கொன்ற போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குற்றவாளிகள் வீழ்த்தப்பட்டதை ஐதரபாத் மக்கள் தீபாவளி போல கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அந்த மாநகர மக்கள் வரவேற்று உள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்கள் அங்கு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இன்று தான் தங்களுக்கு தீபாவளி என்று கூறி பலரும் முழக்கங்களை எழுப்பினர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள பாலத்தின் மீது இருந்து, கீழே நின்று கொண்டிருந்த போலீசார் மீது பலரும் மலர் மாரி பொழிந்தனர். போலீசாரை வாழ்த்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஐதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் சாலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பார்த்து கைகாட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் மக்கள், முக்கியமாக பெண்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே பெண் மருத்துவரின் தந்தை இதுபற்றி கூறுகையில், “4 குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதால் எனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்றார். என்கவுண்டர் செய்த போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,மகள் கொல்லப்பட்ட 10 தினங்களில் நீதி கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், இந்த என்கவுன்டரால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றவியல் நீதி முறைகளை பலப்படுத்த வேண்டியது அனைத்து அரசுகளின் கடமை என்று தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர்ர் பூபேஷ் பகெல், குற்றவாளிகள் தப்பித்து ஓட முயன்றதால் வேறு வழியின்றி போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா, 'நாட்டின் ஒரு பொதுவான குடிமக்களாக அனைவரும் விரும்பிய முடிவு இது என்றார். இந்த முடிவு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அதே நேரத்தில் இது சட்ட அமைப்பின் மூலமாக சரியான முறையில் நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தி நடிகர் ரிஷி கபூர், சபாஷ். தெலுங்கானா போலீசிற்கு என் பாராட்டுகள் என்று கூறியுள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங், பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பி ஓட முடியுமா, பெண் டாக்டருக்கு நீதி கிடைத்தது, தெலுங்கானா போலீசுக்கு நன்றி என்று கூறியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி, இப்போது தான் நீதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விவேக் , நீதி கிடைத்தது. அந்த மருத்துவ சகோதரியின் ஆன்மா அமைதியாகட்டும்.

நோய்வாய்ப்பட்ட புத்தி உடைய வக்கிரகாரர்களுக்கு இது ஒரு பாடம். கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி, இறுதியாக நீதி வழங்கப்பட்டது. இது மட்டும் போதாதது. ஒவ்வொரு பாலியல் குற்றவாளிகளும் இது போன்று தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாட்மின்டர் வீராங்கனை செய்னா நெய்வால், ஐதராபாத் போலீசாரின் சிறப்பான பணி. தலை வணங்குகிறேன் என்று கூறியுள்ளார். இதே நேரத்தில் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து இணையத்தில் உருவாக்கப்பட்ட ஹேஷ் டேக்குகள் உலக அளவில் டிரண்டிங் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேச மாநிலம் மோரதாபாத் அருகே கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவிகள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலும் வாத்தியங்களை இசைத்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே போல் 4 பேர் என்கவுண்டரை வரவேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்லூரி மாணவிகள் வாத்தியங்களை இசைத்து உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசுகளை வெடித்தும் மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சித்தூரில் காந்திசிலை முன்பு திரண்ட பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.