​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்

Published : Dec 06, 2019 3:18 PM

போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்

Dec 06, 2019 3:18 PM

தெலுங்கானாவில் கால்நடை பெண்  மருத்துவரை எரித்து கொன்ற கொடூர குற்றவாளிகள் நான்கு 4 பேரும்  சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால் அவர்களை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயதான கால்நடை பெண் மருத்துவர், கடந்த மாதம் 27-ந்தேதி மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுங்கச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ஸ்கூட்டர் டயர் பஞ்சராக்கி விட்டு, அவருக்கு உதவுவது போல நடித்த லாரி தொழிலாளர்கள் 4 பேர், பெண் டாக்டரை அங்கிருந்து கடத்திச் சென்றனர்.

பின்னர் வாயில் மதுவை ஊற்றி மயக்கம் அடைய செய்து, அவரை பலாத்காரம் செய்த கொடூர ர்கள், பெண் மருத்துவரின் கழுத்தை நெரித்து கொன்றதோடு, அவரது உடலையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்நிலையில் விசாரணையில் இறங்கிய தெலங்கானா போலீசார், டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆராய்ந்தும், அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியும், லாரி ஓட்டுநர் முகமது ஆரீப், லாரி கிளீனர்கள் சென்ன கேசலு, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த 29-ந்தேதி கைது செய்தனர்.அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஐதரபாத் உள்ளிட்ட பல ஊர்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாம்ஷாபாத் முக்கிய சாலையை மூடி போராடிய அப்பகுதி மக்கள்ந குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று பெண் உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினார்கள். 

இதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியது. பெண் மருத்துவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் செய்த போது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட சில பொருட்களை குற்றவாளிகள் நான்கு பேரும் மறைத்து வைத்துள்ளதை விசாரணையில் போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து அதிகாலையில் 4 பேரையும் ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பேரும் கல், கம்பு மற்றும் அங்கு கிடந்த பொருட்களை எடுத்து போலீசாரை தாக்க முயன்றனர்.

அத்தோடு, போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பிடுக்கி தாக்க முயன்றனர். இதனால் போலீசார் திருப்பி சுட்டதில் நான்கு பேரும் உயிரிழந்தனர். பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து, கொன்று அவரது உடலை எரித்த அதே இடத்தில் நான்கு பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டு கிடந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைபராபாத் போலீஸ் ஆணையர் சஜ்னார், குற்றவாகளிடம் இரு நாட்கள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது என்றார். பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட பொருட்களை ஒளித்து வைத்துள்ளதாக குற்றவாளிகள் கூறியதை அடுத்து, அந்த பொருட்களை சேகரிக்க நான்கு பேரும், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் பத்து பேர் அழைத்து சென்றதாக அவர் கூறினார்.

காலை 5.45 மணி அளவில் அங்கு சென்ற போது குற்றவாளிகள் நான்கு பேரும் போலீசாரை தாக்கியதாகவும், முகமது ஆரிப், சென்ன கேசவலு ஆகிய இருவரும் சப் -இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசுவரலு, அரவிந்த் ஆகியோரின் துப்பாக்கிகளை பிடுங்கி சுட்டதாகவும், இதில் சப் -இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், குற்றவாளிகளை சரண டையுமாறு போலீசார் கூறியதாவும், ஆனால் குற்றவாளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்த முற்பட்டதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 4 பேரும் உயிரிழந்த தாகவும் சஜ்னார் தெரிவித்தார்.

இதனிடையே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், தெலங்கானா அரசிடம் அறிக்கை கேட்டு உள்ளது. இதே போல இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.