​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடுத்த கடனை திரும்பக் கேட்ட நகைக்கடை உரிமையாளர் கொலை

Published : Dec 06, 2019 12:50 PM



கொடுத்த கடனை திரும்பக் கேட்ட நகைக்கடை உரிமையாளர் கொலை

Dec 06, 2019 12:50 PM

நாகை அருகே நகைக்கடை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரர் போலீசாரிடம் சிக்கினார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜித்தேந்திர்குமார் என்பவர், திருமருகல் கடைத்தெருவில் ரிக்கப் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுகடை வைத்து நடத்தி வந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், பலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், திருப்புகலூர் அடுத்த கொய்யாத்தோப்பு என்ற இடத்தில் சாலையோரத்தில் உடலில் பலத்த காயங்களுடன் ஜித்தேந்திர்குமார் இறந்து கிடந்தார். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த திட்டச்சேரி போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

இச்சம்பவம் நடந்ததில் இருந்தே ஜித்தேந்திர்குமார் நகைக்கடை அருகாமையில் இருக்கும் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுக்கடை பூட்டியே இருந்துள்ளது. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டிற்குச் சென்று பார்த்த பொழுது வலிப்பு வந்தது போன்று நடித்துள்ளார் தினேஷ்குமார். அவரை பிடித்து உரிய முறையில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

ஜித்தேந்திர்குமாரிடம் இருந்து சுப்பு என்கிற தினேஷ்குமார் சுமார் 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக வட்டியும் அசலையும் கொடுக்காமல் அலைகழித்தும் வந்துள்ளார். நிதானம் இழந்த ஜித்தேந்திர்குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சத்தம் போடவே, மூன்று தினங்களுக்குள் பணத்தை திரும்பக் கொடுக்கப்பதாக உறுதியளித்திருக்கிறார் தினேஷ்குமார்.

ஆனால் நினைத்தப்படி பணத்தை திரட்ட முடியாததால் ஜித்தேந்திர்குமாரை தீர்த்துக் கட்டுவதே ஒரே வழி என முடிவெடுத்த தினேஷ்குமார், தனது நண்பரான குருவாடியை சேர்ந்த தீபக் என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 3ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த ஜித்தேந்திர்குமாரை, காரில் நண்பருடன் சென்று வழிமறித்த தினேஷ்குமார், சன்னாநல்லூரில் தனது நண்பர் பணத்தோடு காத்திருப்பதாகவும் அங்கு வந்தால் பணத்தை வாங்கிக் கொடுப்பதாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஜித்தேந்திர்குமார் காரில் ஏறிச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கேபிள் ஒயரால் ஜித்தேந்திர்குமாரின் கழுத்தை இறுக்கு கொன்றுள்ளார் தினேஷ்குமார். பின்னர் விபத்து போன்ற மாயயை ஏற்படுத்த சாலையோரம், ஜித்தேந்திர்குமாரின் உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மீண்டும் திருமருகலுக்கு சென்று ஜித்தேந்திர்குமாரின் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விபத்தில் அடிப்பட்டு உயிரிழந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். தினேஷ்குமாரையும், கொலைக்கு உதவிய அவரது நண்பர் தீபக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர்.