​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீரில் தத்தளிப்பவரை காப்பாற்ற உதவும் கருவி..!

Published : Dec 05, 2019 3:00 PM



நீரில் தத்தளிப்பவரை காப்பாற்ற உதவும் கருவி..!

Dec 05, 2019 3:00 PM

று, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தத்தளிப்பவர்களை உயிருக்கு போராடும் நபர்களை காப்பாற்ற உதவும் வகையிலான மீட்பு இயந்திரத்தை ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். அகில இந்திய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் பற்றிய செய்தி தொகுப்பு இது.

சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சி மாணவ மாணவிகள் 6 பேர் கூட்டாக சேர்ந்து தங்களது ஆய்வகத்தில், 5 கிலோ எடையில் சிறிய வடிவிலான மீட்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

நீரில் மிதக்கும் வகையில், முழுக்க முழுக்க பி.வி.சி குழாயினால் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், வெப்ப நிலை சென்சார் கருவிகளும், ஜி.பி.எஸ் மூலம் இயங்கும் வழி செலுத்தல் கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய, ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த இயந்திரத்தை நீரில் மிதக்கவிட்டு, தத்தளிக்கும் ஒருவரை நோக்கி செலுத்தலாம். அதனை அவர் பற்றிக்கொண்டதும், மீண்டும் ரிமோட் மூலம் கரை பகுதி நோக்கி இயந்திரத்தை செலுத்தி பத்திரமாக மீட்கலாம்.

இந்த இயந்திரம் 80 கிலோ எடை உள்ளவர்களையும் தாங்கும் வலிமை கொண்டது என்றும், இதன் மூலம் ஆறு, குளம், ஏரி, கடல் ஆகியவற்றில் சிக்கியவர்களை காப்பாற்றலாம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று 5 மணி நேரம் வரை இயங்கும் வகையில் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மாணவியர் தெரிவித்தனர்.

மாணவன் யுவன்சங்கர், மாணவிகள் தர்ஷினி, சந்தியா, ரம்யா மற்றும் இந்திரா பிரியதர்ஷினி, மைய்ஸ்ரீ ஆகியோரின் கூட்டு முயற்சியில், பயிற்சியாளர் நந்தகுமார் வழிகாட்டுதலில் உருவாக்கிய இந்த இயந்திரம், வரும் 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுவின் விஸ்வகர்மா விருதுக்கு தேர்வாகி பாராட்டுப்பெற்றுள்ளது.