​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பலன் தரும் பண்ணைக்குட்டைகள்...மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

Published : Dec 05, 2019 6:50 AM



பலன் தரும் பண்ணைக்குட்டைகள்...மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

Dec 05, 2019 6:50 AM

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 100 விழுக்காடு மானியத்துடன் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள், கோடைகால வறட்சியை எதிர்கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலத்தடி நீர் பற்றாக்குறை வெகுஜன மக்கள் மட்டுமின்றி விவசாயிகளிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளில் கோடைப்பருவம் கொடுத்த உச்சபட்ச அடியை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.

போதிய மழையின்றி, நிலத்தடி நீர் வற்றிப்போய், விவசாயம் செய்ய முடியாமல் ஏராளமான விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்ட சோகங்களையும் பார்க்க முடிந்தது. மழை பெய்யும் காலங்களில் அதனை நிலத்தடிக்குள் சேமிக்காமல் போனதன் விளைவுதான் இவை. இந்தப் பிரச்சனையை சமாளிக்க எளிமையான முறையாக விளங்குகிறது பண்ணைக்குட்டை முறை.

 நிலத்தின் ஒரு மூலையில் சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் பள்ளம் தோண்டி மழை நீரை நேரடியாகச் சேமித்து, பின்பு தேவை ஏற்படும்பொழுது விவசாயத்துக்குப் பயன்படுத்தக்கூடியதே பண்ணைக்குட்டை என்பதாகும்.

இது நீரினை சேமித்து வைப்பதற்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரினுடைய அளவை அதிகரிக்கவும் பயன்படுகிறது. பண்ணைக்குட்டை அமைப்பதால் 4 லட்சம் லிட்டர் முதல் 12 லட்சம் தண்ணீர் வரை சேமிக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர் வல்லுநர்கள். கிணறுகளில் தண்ணீர் சேகரமாவதோடு பண்ணைக்குட்டைக்கு அருகில் பயிரிடப்பட்டுள்ள பயிரின் வேர்களுக்கு ஈரப்பதத்தை அளித்து வறட்சியால் வாடாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 100 விழுக்காடு மானியமாக ஒரு லட்ச ரூபாய் செலவில், கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளின் நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 667 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு இதுவரை 167 பண்ணைக்குட்டைகள் வரை வெட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

நிலத்தடி நீர் சேமிப்புக்கு மட்டுமல்லாது பண்ணைக்குட்டையில் மீன்களை வளர்ப்பதன் மூலமும் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருவதாகக் கூறுகின்றனர். பண்ணைக்குட்டையின் நான்குபக்க கரைகளில் வெண்டை, கத்தரி, பாகற்காய், அவரை, பரங்கி, பூசணி போன்றவற்றையும் நட்டு லாபம் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர். (( GFX 2

பண்ணைக்குட்டை அமைத்து, மழை நீரை தேக்கி சுழற்சி செய்தால் மானாவாரி நிலத்திலும் பசுமை போர்வையை உருவாக்க முடியும். இதற்கு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் பரஸ்பர ஒத்துழைப்பு மட்டுமே தேவை....