​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் முதல் கேங்‘வுமன்'... நம்பிக்கையுடன் காத்திருக்கும் சேலம் பெண்...!

Published : Dec 05, 2019 6:45 AM



தமிழகத்தின் முதல் கேங்‘வுமன்'... நம்பிக்கையுடன் காத்திருக்கும் சேலம் பெண்...!

Dec 05, 2019 6:45 AM

சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த, 2 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடல் தகுதி தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். குடும்பத்தின் பொருதாளார சுமையை பங்கிட்டுக்கொள்ள தளராத மனதுடன் அவர் எடுத்துள்ள இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

தமிழகத்தில் மின் வாரியத்தில் கம்பம் நடுதல் மற்றும் புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதற்கான “கேங்மேன்” பணியில் 5 ஆயிரம் இடங்களை நிரப்ப உடல்தகுதி தேர்வு நடந்து வருகிறது. 

சேலம் மாவட்டம் உடையாப்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தேர்வில், கம்பம் ஏறுதல், உயர் அழுத்த மின்கம்பிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் இணைத்தல், மின்சாதனங்களை தூக்கிக்கொண்டு ஓடுதல் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் உடல் தகுதி தேர்வில் கணிசமான அளவில் பெண்களும் பங்கேற்று வருகின்றனர். அவர்களில் மேச்சேரியை அடுத்துள்ள அமரம் கிராமத்தைச் சேர்ந்த லதா என்ற பெண் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள லதாவுக்கு வீட்டின் பொருளாதாரத்தைச் சமாளிக்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இந்த நேரத்தில் அரசின் கேங்மேன் பதவிக்கான அறிவிப்பு வரவே, விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளார். இதற்கு லதாவின் குடும்பத்தினரும் மறுப்பு சொல்லாமல் ஊக்கம் கொடுக்கவே, வீட்டில் இருந்தபடியே மரம் ஏறுதல், கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

அந்த பயிற்சி கொடுத்த நம்பிக்கையோடு உடல் தகுதி தேர்வுக்குச் சென்றவர், 8 நிமிடங்களில் ஏறி இறங்க வேண்டிய 30 மீட்டர் உயரம் கொண்ட கம்பத்தை 6 நிமிடங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். 31.5 கிலோ எடையிலான மின்சாதனப் பொருட்களை தூக்கிக்கொண்டு ஒரு நிமிடத்துக்குள் கடக்க வேண்டிய 100 மீட்டர் தூரத்தை 46 வினாடிகளில் கடந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் 2 நிமிடங்களில் இணைக்க வேண்டிய உயர் மின்னழுத்த கம்பிகளை 1.46 நிமிடங்களில் இணைத்த லதாவை அங்கிருந்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

 எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக வீட்டு வேலைகளுக்கு இடையே தன்னை தயார்படுத்தி வருகிறார் லதா....பயிற்சி எடுப்பதற்காக வீட்டின் அருகே இருக்கும் மின் கம்பத்தில் ஏறும் லதாவை எச்சரிக்கும் அதிகாரிகள், உரிய பாதுகாப்பு சாதனங்களை அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

ஏரோட்டுவது முதல் ஏரோப்பிளேன் ஓட்டுவது வரை சாதித்து வரும் பெண்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்கள் நிறைந்த, கடும் உடலுழைப்பை கொடுக்க வேண்டிய இதுபோன்ற பணிகளையும் தங்களால் மேற்கொள்ள முடியும் என நிரூபித்துள்ளார் லதா.