​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை.. புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Published : Dec 04, 2019 7:15 AM



உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை.. புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Dec 04, 2019 7:15 AM

மருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது உடலை அறுப்பதால் இறந்தவரின் உறவினர்கள் வேதனைப்படுவதாக குறிப்பிட்டார்.

இதனால், உடலை கண்ணியமாக நடத்தும் வகையில், இறந்தவரின் உடலை கூறு போடாமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

ஒரு உயர் மட்ட நிபுணர் குழு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று மெய்நிகர் பிரேத பரிசோதனை (virtual autopsy) குறித்து தீவிரமாக கற்று தேர்ந்து வந்துள்ளதாக கூறினார். சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங், இஸ்ரேல், மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளில் ஏற்கனவே மெய்நிகர் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்த பிரேத பரிசோதனை முறையை தொடங்கப் போகும் முதல் நாடு இந்தியா. இதற்கான நவீன கருவிகளை வாங்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்களில் இது நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

முதலில் இம்முறை பிரேத பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

மேலும் அனைத்து பதிவுகளும் டிஜிட்டல் முறையில் மதிப்பாய்வுக்காக சேமிக்கப்படும். மெய்நிகர் பிரேத பரிசோதனைக்கான செலவு மற்றும் நேரம் பயனுள்ளதாக இருக்கும். தற்போது அதிகபட்சமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் செய்யப்பட்டு வரும் பிரேத பரிசோதனை, அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வெறும் 30 நிமிடங்களில் செய்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.