​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாயியிடம் ரூ. 55 லட்சம் வழிப்பறி ? உண்மையைத் தேடி தீவிரமாகும் விசாரணை

Published : Dec 03, 2019 8:56 PM

விவசாயியிடம் ரூ. 55 லட்சம் வழிப்பறி ? உண்மையைத் தேடி தீவிரமாகும் விசாரணை

Dec 03, 2019 8:56 PM

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயியிடம் இருந்து 55 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த நத்தக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னதுரை. அதே பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை வாங்க திட்டமிட்டு இருந்தார். இதற்கான பணத்தை உறவினரிடம் கடனாக வாங்க சென்னை சென்றுள்ளார்.

சென்னையில் அவரது உறவினரான ராமதாஸ் என்பவரிடம் இருந்து 55 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்ட அவர், பேருந்தில் ஆத்தூர் சென்றார். திங்கட்கிழமை இரவு பேருந்தில் ஏறியவர், செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நத்தகரை சுங்கச்சாவடியில் வந்து இறங்கினார்.

அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டவரை 2 இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டியும் மிளகாய்ப் பொடியைத் தூவியும் 55 லட்ச ரூபாயை பறித்துச் சென்றது. இதுகுறித்து சின்னதுரை அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தை ஆய்வு செய்தனர்.

சின்னதுரை 55 லட்ச ரூபாய் பணத்தை உறவினரிடம் வாங்கி வரும் தகவல் வழிப்பறி கும்பலுக்கு எப்படித் தெரிந்தது, இவ்வளவு பெரிய தொகையை வங்கிப் பரிவர்த்தனை மூலம் பெறாமல், ஏன் ரொக்கமாக வாங்கி வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கேள்விகளோடு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சின்னதுரைக்குப் பணத்தை கடனாகக் கொடுத்ததாகக் கூறப்படும் சென்னையைச் சேர்ந்த ராமதாசிடம் போலீசார் விசாரித்துள்ளனர். வீடு கட்டுவதற்காக வங்கியில் தாம் கடன் வாங்கியிருந்ததாகவும் மழை பெய்வதால், பணிகளை ஒத்திவைத்ததாகவும் அவசரத்துக்கு என்று கேட்டதால் சின்னதுரைக்கு கொடுத்ததாகவும் போலீசாரிடம் ராமதாஸ் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து வங்கியில் கடன் வாங்கியதற்கான ஆவணங்களுடன் தலைவாசல் வரும்படி அவருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் உண்மையா, நாடகமா என்ற விசாரணை ஒருபுறம் இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகையை உரிய பாதுகாப்பு இல்லாமல் எடுத்து வந்தது தவறு என்கின்றனர் போலீசார். குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கி மூலம் பரிவர்த்தனை செய்வதே சிறந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.