​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
17 உயிரை காவு வாங்கிய கருங்கல் சுவர்..! கட்டுமான கோளாறு விபரீதம்

Published : Dec 03, 2019 6:39 AM

17 உயிரை காவு வாங்கிய கருங்கல் சுவர்..! கட்டுமான கோளாறு விபரீதம்

Dec 03, 2019 6:39 AM

மேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிடுகிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி காலனியில் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பக்கத்தில் சாய்தளமான அமைப்பில் 50க்கும் மேற்பட்ட ஏழை கூலி தொழிலாளர்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பங்களாவை விலைக்கு வாங்கிய ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணி பக்கத்தில் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் தனது வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க சிறிய அளவிலான பழைய சுவரை இடித்து அகற்றி விட்டு, பலமான அஸ்திவாரம் ஏதும் இன்றி அவசர கோலத்தில் 80 அடி நீளமும் 15 அடி உயரமும் கொண்ட கருங்கல் சுற்றுச்சுவரை அமைத்துள்ளார்.

தாழ்வான பகுதியில் இருந்து பார்த்தால் 20 அடி உயரம் இருக்கும் வகையில் அந்த சுவர் அமைந்திருந்தது. சுற்றுசுவரின் மேல், பூச்சு வேலைகள் ஏதும் மேற்கொள்ளாததால் அப்போதே அந்த சுவர் பிளவு பட தொடங்கி இருக்கின்றது.

கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் ஏற்கனவே பலமில்லாமல் நின்ற அந்த கருங்கல் சுவர் மழை நீர் இறங்கி ஊறியதால் அதிகாலை நேரத்தில் ஒட்டு மொத்தமாக தாழ்வான பகுதிக்குள் சரிந்து விழுந்தது.

விழுந்த வேகத்தில் அந்த சுவற்றை யொட்டி தாழ்வான பகுதியில் அமைந்திருந்த அருக்காணி மற்றும் சிவகாமி ஆகியோரது குடும்பங்களை சேர்ந்த 4 வீடுகள் இடிந்து நொறுங்கி தரைமட்டமானது. இதில் சுடுமண் ஓடால் வேயப்பட்ட அந்த வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், தமிழ்நாடு மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் இறங்கினர். 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிணகூறாய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கனமழை காரணமாக தனது ஊருக்கு செல்ல முடியாமல் தங்கள் உறவினர் வீட்டில் தங்கிய புளியம்பட்டியை சேர்ந்த ருக்மணி என்பவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சிதலைவர் ராசாமணி, சுவர் இருந்த இடத்தில் நின்றபடி தாழ்வான பகுதி மக்களை சந்தித்தார். அப்போது அஸ்திவாரம் இல்லாமல் இவ்வளவு பெரிய சுவர் கட்ட வேண்டாம் என கோரிக்கை வைத்ததாகவும் அதனை ஆரம்பத்தில் தடுத்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டனர்.

மேலும் இந்த சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

4 வீடுகளில் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்த நிலையில், சுவர் உடைந்து பலியானவர்களின் குடும்பத்தில் ஒரு சிறுமியும் பெண் ஒருவரும் திருமணத்திற்காக வெளியூர் சென்றதால் உயிர்பிழைத்தனர். மற்ற அனைவருமே பலியான சோகம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதற்கிடையே பலியானவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து 17 பேரின் சடலங்களும் பிணக்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியானவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பலியானவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறினார்.

சம்பவ இடத்திற்கு செவ்வாய்கிழமை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளனர். தரமான அஸ்திவாரமும், போதிய தூண்களும் இல்லாமல் மட்டமான சிமெண்டு கலவையால் கட்டப்பட்டதால் 80 அடி நீள கருங்கல் சுவர் அடியோடு சரிந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதே போல அந்த பகுதியில் 15 அடி உயரத்திற்கு தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர்களை இடிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தரமற்ற சுற்றுசுவரை கட்டி 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமானவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.