​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் மருத்துவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் அடித்துக் கொல்ல வேண்டும் - நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

Published : Dec 02, 2019 3:52 PM

பெண் மருத்துவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் அடித்துக் கொல்ல வேண்டும் - நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

Dec 02, 2019 3:52 PM

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற கொலையாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும் என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் எனவும், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயாபச்சன், கொலையாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் கும்பலாக சேர்ந்து அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆவேசத்துடன் பேசினார். 

மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த், வரும் 31 ஆம் தேதிக்குள் கொலையாளிகள் 4 பேரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பானதாக நாடு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 பேரும், மீண்டும் இதே போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அவர்கள் சிறையில் இருந்து வெளிவரும் முன்பே அறுசை சிகிச்சை செய்தோ அல்லது ரசாயன முறையிலோ ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற மக்களவையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த பிரச்சனைகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அப்போது பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த தேசத்திற்கும் தலை குனிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். அனைத்து தரப்பினரையும் அந்த சம்பவம் காயப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார்.