​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்க்கரை ஆலைக்கழிவால்.. சாக்கடையான நிலத்தடி நீர்..!

Published : Nov 30, 2019 8:46 PM



சர்க்கரை ஆலைக்கழிவால்.. சாக்கடையான நிலத்தடி நீர்..!

Nov 30, 2019 8:46 PM

தேனி மாவட்டத்தில் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வெளியேற்றிய ரசாயனக் கழிவுகளால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, மனிதர்கள், கால்நடைகள், விவசாயம் என எதற்கும் பயன்படாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் அமைந்துள்ளது ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை. 30 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலை அமைக்கப்படும் வரை இங்கு நிலத்தடி நீர் அத்தனை சுத்தமாக இருந்ததாகக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். சர்க்கரை உற்பத்தியோடு சேர்த்து, அதன் கழிவுகளைக் கொண்டு எரிசாராயமும் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. எரிசாராயம் தயாரித்தது போக மீதமிருந்த கழிவுகளை ஆலையின் பின்பக்கம் உள்ள நிலத்தில் போட்டு, அது வெளியில் தெரியாத வண்ணம் உழுதுள்ளதாகக் கூறும் பொதுமக்கள், சில இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் இந்தக் கழிவுகளை உள்ளே செலுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

அவ்வாறு 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலத்தடிக்குள் செலுத்தப்பட்ட எரிசாராயக் கழிவுகள் நிலத்தடி நீரை பாழ்படுத்தி, மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வயலுக்கு வேலைக்கு வந்தால் கண்ணாடி போன்று இருக்கும் கிணற்று நீரைத்தான் குடிப்பதற்காகப் பயன்படுத்துவோம் என்று கூறும் விவசாயிகள், இன்றைக்கு வீட்டிலிருந்து குடிநீர் கொண்டு வருவதாகவும் கிணற்று நீரை தாங்கள் மட்டுமல்ல கால்நடைகள் கூட குடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். 

இந்த நீரில் குளித்தால் பல்வேறு தோல் வியாதிகள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் இந்தப் புகார் குறித்து ஆலை நிர்வாகத்திடம் கேட்டபோது கடந்த 2014 ஆண்டே கழிவு நீர் வெளியேற்றத்தை தாங்கள் நிறுத்திவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பு வரை 25 ஆண்டுகளாக நிலத்தடியில் சேர்ந்த கழிவுதான் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரியிடம் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டு, அவர்களும் வந்து நீர் மாதிரிகளை எடுத்துச் சென்று சோதனை செய்து, குடிநீருக்கோ, விவசாயத்துக்கோ தகுதியற்ற நீராக உள்ளது என சான்றிதழும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான தீர்வை மட்டும் இன்னும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர் விவசாயிகள்...

நிலத்தடி நீர் மட்டுமல்ல, அங்கு காற்றும் கடும் மாசடைந்துள்ளது. வீசும் காற்றில் அவ்வப்போது வரும் துர்நாற்றம் சகிக்கவே முடியாத அளவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய தீர்வை வழங்காவிட்டால், தங்களது அடுத்த தலைமுறையும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகும் என அச்சம் விலகாமல் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.