​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைகளால் சூழப்பட்ட எழில் கொஞ்சும் திருப்பத்தூரின் சிறப்புகள்..!

Published : Nov 28, 2019 3:15 PM



மலைகளால் சூழப்பட்ட எழில் கொஞ்சும் திருப்பத்தூரின் சிறப்புகள்..!

Nov 28, 2019 3:15 PM

புதிதாக உதயமாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் மலைகளால் சூழப்பட்டு, இயற்கை வளங்கள் நிறைந்து பல்வேறு சிறப்புகள் பெற்றதாக அமைந்துள்ளது. பிரியாணிக்கு புகழ்பெற்ற ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சியில் 1790 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைநகராக இருந்துள்ளது. பின்னர் வட ஆற்காடு மாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதனுடன் இனைக்கப்பட்டது. வட ஆற்காடு மாவட்டம், வேலூர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டது. தற்போது வேலூரை பிரித்து திருப்பத்தூர் புதிய மாவட்டமாக திருப்பத்தூர் உருவாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை, ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஜவ்வாது மலையில் இயற்கை எழில் கொஞ்சும் பீமன் அருவி, அமிர்திவி உயிரியல் பூங்காவும், ஏராளமான நீரோடைகளும் உள்ளன.

இங்கு உற்பத்தியாகும் செய்யாறு, ஆரணி ஆறு, கமண்டல நாக நதி, மிருகண்ட நதி உள்ளிட்ட ஆறுகள் மூலம் ஏராளமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஜவ்வாது மலையில் உள்ள சந்தன காடுகளில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டைகளை சேமிக்க, திருப்பத்தூரில் ஆசியாவின் 2 வது பெரிய சந்தன கிடங்கு அமைக்கப்பட்டு சந்தன மாநகர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.

புதிய திருப்பத்தூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1797.92 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது. மொத்த மக்கள் தொகை 11,11,812 பேர் ஆவர்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆகிய இரு வருவாய் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்ரம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும், 195 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன.

அம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகளும், திருப்பத்தூர் , நாட்ரம்பள்ளி, உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்கள், ஆலங்காயம், நாட்ரம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளும் , 707 கிராம் ஊராட்சிகளும் அடைங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மூலம் அன்னிய செலாவணி ஈட்டப்படுவதுடன், ஆம்பூர் பிரியாணி உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.

ஆம்பூர் வழியாக செல்லும் வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் அங்கு பிரியாணியை சுவைத்துவிட்டு செல்வது வழக்கம். அதிக ரயில் போக்குவரத்து நிறைந்த நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான ஜோலார்பேட்டை சந்திப்பு இம்மாவட்டத்தின் சிறப்பாகும்.