​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறந்த பிஞ்சு குழந்தை நினைவாக தாய் செய்த நெகிழ்ச்சி செயல்.. தாய்மைக்கு ஏது ஈடு?

Published : Nov 27, 2019 5:03 PM

இறந்த பிஞ்சு குழந்தை நினைவாக தாய் செய்த நெகிழ்ச்சி செயல்.. தாய்மைக்கு ஏது ஈடு?

Nov 27, 2019 5:03 PM

ஒரு குழந்தையை இழக்கும் வலியை தாங்க மிகுந்த மனவலிமை வேண்டும். பிறந்து சில மணிநேரத்திலேயே இறந்த குழந்தை ஒன்றின் நினைவாக, அதன் தாய் செய்துள்ள சம்பவம் உலக மக்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் என்ற மாகாணத்தை சேர்ந்தவர் இளம் தாய் சியரா ஸ்ட்ராங்பீல்ட். இவர் கர்ப்பமாக இருந்த போது 20 வாரங்களில் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொண்டார். அப்போது தான் சியரா வயிற்றில் இருந்த குழந்தைக்கு, ட்ரிசோமி 18 என்ற அரிய வகை மரபணு நோய் இருப்பதை கண்டறிந்து கூறியுள்ளனர்.

இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய். எனவே குழந்தை பிறந்தாலும் நீண்ட நாள் வாழாது. எனவே கருவை கலைத்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் பிறந்த குழந்தைக்கு சிறிது நேரத்திலேயே சாமுவேல் லீ என பெயரிட்டார். ஆனால் இந்த மகிழ்ச்சியை சிறிது நேரம் கூட அனுபவிக்க முடியாமல் போனது. பிறந்த 3 மணி நேரத்திலேயே இறந்தது குழந்தை சாமுவேல்.

தாய்ப்பாலை கூட குழந்தை சாமுவேல் லீக்கு கொடுக்க முடியாததற்கு வருந்தினார் சியரா. இதனை அடுத்து சாமுவேல் லீயின் நினைவாக தனது தாய்பாலை, தானமாக வழங்க சியரா முடிவு செய்தார். குறைப்பிரசவத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பயன்படட்டும் என்ற எண்ணத்தில் தனது தாய்ப்பாலை சுமார் 63 நாட்கள் தானம் செய்துள்ளார்.

வெஸ்டர்ன் கிரேட் லேக் பகுதியில் அமைந்துள்ள மதர்ஸ் மில்க் பேங்கிற்கு சுமார் 500 அவுன்ஸ் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கினார்.

வாழ்க்கையில் மிக மோசமான சம்பவம் நடந்திருந்தும் கூட அந்த இழப்பை தாங்கி கொண்டு, பிற குழந்தைகளுக்கு பயன்படுமே என தன் தாய்ப்பாலை தானம் செய்த சியரா, தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திவிட்டார்.