​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தைகள் கண் முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்

Published : Nov 26, 2019 12:04 PM



குழந்தைகள் கண் முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்

Nov 26, 2019 12:04 PM

தஞ்சையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் குழந்தைகளின் கண்முன்னே அவர்களது தாயும் அவரது ஆண் நண்பரும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வனிதா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த வனிதா, கனகராஜ் என்ற நபருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த வனிதா, குடும்பத் தேவைக்காக தனது உறவினரான பிரகாஷ் என்பவரிடம் ஓராண்டுக்கு முன் 2 லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அதில் ஒன்றரை லட்ச ரூபாயை கொடுத்துவிட்ட நிலையில், மீதி 50 ஆயிரம் ரூபாயை கொடுக்க முடியாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வனிதா மீது போலீசில் புகாரளித்ததோடு, அவரிடம் அவ்வப்போது தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார் பிரகாஷ் என்று சொல்லப்படுகிறது.

காலை தனது கூட்டாளி சூர்யா மற்றும் காதலி மகேஸ்வரி ஆகியோரோடு வனிதாவின் வீட்டுக்கு வந்த பிரகாஷ், பணம் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது வனிதாவுடன் அவரது ஆண் நண்பர் கனகராஜும் வீட்டில் இருந்துள்ளார். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரகாஷ் தரப்பு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் ஆகியவற்றைக் கொண்டு வனிதாவையும் கனகராஜையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

வனிதாவின் இரண்டு பெண் குழந்தைகளின் கண் முன்னே அரங்கேறிய இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பியோடி தலைமறைவாகவுள்ள பிரகாஷ், சூர்யா, மகேஸ்வரி ஆகியோரைத் தேடி வருகின்றனர்