​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேப்பருக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்... மறந்து பேப்பரை எடைக்குப் போட்ட பெண்

Published : Nov 22, 2019 8:21 AM



பேப்பருக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்... மறந்து பேப்பரை எடைக்குப் போட்ட பெண்

Nov 22, 2019 8:21 AM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, பழைய பேப்பருக்குள் வைத்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பெண் ஒருவர் கவனக்குறைவாக எடைக்குப் போட்ட நிலையில், பனிரெண்டே மணி நேரத்தில் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

மசக்காளிப்பட்டியைச் சேர்ந்த சாமிவேல் இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார் இவரது மனைவி கலாதேவி. கணவர் சென்னையில் வேலை பார்ப்பதால் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக தான் வசிக்கிறாராம் கலாதேவி.

வீட்டில் ஆண் துணை இல்லாத காரணத்தால் நாடெங்கும் நிகழும் திருட்டு சம்பவங்களை பார்த்து அச்சத்தில் இருந்திருக்கிறார். ஒருவேளை நம் வீட்டிலும் கொள்ளையர்கள் நுழைந்து விட்டால் என்ன செய்வது, விலை உயர்ந்த நகைகளை பறி கொடுக்க வேண்டியதாகிவிடுமே என யோசித்துள்ளார்.

அதன் விளைவு வீட்டிலிருந்த பழைய புத்தகங்கள் மற்றும் பேப்பரை வைத்து லட்சக்கணக்கிலான நகைகளை காப்பாற்ற சாமர்த்தியமாக யோசித்து அதன்படி செயல்பட்டார். சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் வைர தோட்டை பீரோவில் வைக்காமல் பழைய பேப்பருடன் கலந்து வைத்து விட்டார்

பழைய பேப்பர்களுக்கு அடியில் நகைகளை மறைத்து வைத்திருந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் பழைய பேப்பர்களை வாங்க வந்தவரிடம் வீட்டில் இருந்த பழைய புத்தகம், பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், ஆகியவற்றை எடைக்கு போட்டு பணத்தை வாங்கிக் கொண்டார்.

ஆனால் பழைய பேப்பர்களோடு மறைத்து வைத்திருந்த நகைகளை சுத்தமாக மறந்து விட்டார் கலாதேவி. எடைக்கு எடுக்க வந்தவர் சென்ற சிறிது நேரம் கழித்து தான், அவருக்கு தன் நகைகளை பற்றிய நினைப்பே வந்துள்ளது

கொள்ளைக்காரனுக்கு பயந்து நகைகளை ஒளித்து வைக்க போய் கவனக்குறைவாக நாமே வலிய சென்று நகைகளை பறிகொடுத்து விட்டோமே என நொந்து கொண்டார். பின்னர் உடனடியாக சுதாரித்த கலாதேவி, ராசிபுரம் போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

பேப்பர் வாங்கிச் சென்ற சேலத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டன. நகைகளை பத்திரமாக வைத்திருந்த செல்வராஜ்க்கு 10 ஆயிரம் ரூபாயை கலாதேவி அன்பளிப்பாக கொடுத்தார்.