​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை.. மத்திய அமைச்சரவை முடிவு

Published : Nov 21, 2019 8:18 AM



பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை.. மத்திய அமைச்சரவை முடிவு

Nov 21, 2019 8:18 AM

பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொருளாதார மந்தநிலை மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டன. 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் அரசின் வசமுள்ள 53 புள்ளி 29 விழுக்காடு பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதேபோல், கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வசமுள்ள பங்குகளில் 53 புள்ளி 75 சதவீதத்தை விற்பனை செய்வதற்கும், கான்கார் எனப்படும் சரக்குப் பெட்டக கழகத்தில் 30 புள்ளி 9 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் நிலவும் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறினார். நடந்து முடிந்த பருவத்தில் வெங்காய சாகுபடி 26 சதவீதம் குறைந்து விட்டதாகக் கூறிய அவர், 4 ஆயிரம் டன் வெங்காயத்தை பொதுத்துறை நிறுவனமான எம்எம்டிசி-யும், எஞ்சியவற்றை தனியார் நிறுவனங்களும் இறக்குமதி செய்யும் என மேலும் தெரிவித்தார்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில், அந்நிறுவனங்கள் அலைக்கற்றை ஏலத் தவணைத் தொகை செலுத்துவதை 2 ஆண்டுகள் தள்ளிவைப்பதாகவும், இந்த தொகை அடுத்துவரும் ஆண்டுகளில் வசூலிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். இதன் மூலம் 42,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வெளியேறுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.