​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முரசொலி நில விவகாரம் தொடர்பாக முதல்கட்ட விசாரணை..!

Published : Nov 19, 2019 5:24 PM

முரசொலி நில விவகாரம் தொடர்பாக முதல்கட்ட விசாரணை..!

Nov 19, 2019 5:24 PM

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்று முதல்கட்ட விசாரணை நடத்தியது. 

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், சென்னை சாஸ்திரி பவனில் இன்று விசாரணை நடைபெற்றது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை நடத்தினார். முரசொலி சார்பில் அறக்கட்டளை உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, தமிழக அரசு தரப்பில் தலைமைச் செயலாளர் சண்முகம், மனுதாரர் பாஜக சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, மனுதாரர் சீனிவாசனும், அரசு தரப்பில் தலைமைச்செயலாளரும் எந்த ஆதாரத்தையும் தராமல் வாய்தா கேட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்தின் துணை தலைவருக்கு இல்லை என்பதையும் எடுத்துரைத்ததாகவும், பாமக நிறுவனர் ராமதாஸ், மனுதாரர் சீனிவாசன் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

விசாரணையின் போது மூலப்பத்திரத்தை முரசொலி தரப்பில் காண்பிக்கவில்லை என்றும், பட்டாவை கூட காண்பிக்கவில்லை என்றும் பாஜக சீனிவாசன் கூறினார். தங்களிடம் இருந்த  ஆதாரங்களை கொடுத்துள்ளதாகவும் ஆவண காப்பகத்தில் பழைய ஆவனங்களை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் வாரத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் பின்னர் தெரிவித்தார்.