​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி

Published : Nov 17, 2019 9:18 PM

அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் நரேந்திர மோடி

Nov 17, 2019 9:18 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆதலால் குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தவும், மசோதாக்களை நிறைவேற்ற அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு கோரியும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர் ரஞ்சன் செளத்ரி, குலாம் நபி ஆஸாத், சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், நாட்டின் பொருளாதார விவகாரம், வேலைவாய்ப்பு விவகாரம், விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அவரை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விதிகள், நடைமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து விவகாரங்கள் குறித்தும் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் முக்கிய பணியாக ஆலோசனை மற்றும் விவாதம் நடத்துவது இருக்க வேண்டுமென்றும், கடந்த கூட்டத் தொடர் போல குளிர்கால கூட்டத் தொடரும் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.