மராட்டிய முதலமைச்சர் பதவி, துணை முதலமைச்சர் பதவிகள் உள்ளிட்டவை குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே முடிவு இன்னும் எட்டப்படாததால், 3 கட்சிகளும் கூட்டாக சேர்ந்து ஆட்சியமைப்பது மேலும் காலதாமதமாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் நினைவுதினத்தையொட்டி, மும்பையிலுள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பட்னவீஸ், பாஜக மூத்த தலைவர்கள் பங்கஜா முன்டே, வினோத் தாவ்தே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து பட்னவீஸ் சென்றபோது, நினைவிடத்துக்கு வெளியே திரண்டிருந்த சிவசேனா தொண்டர்கள் தங்கள் கட்சியே அடுத்து ஆட்சியமைக்கும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் பால்தாக்கரே நினைவிடத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மனைவி ராஷ்மி, மகன் ஆதித்ய தாக்கரே, மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராவத், முதலமைச்சர் பதவி தொடர்பாக பால்தாக்கரேக்கு உத்தவ் தாக்கரே வாக்குறுதியளித்துள்ளதாகவும், அதை பூர்த்தி செய்ய சிவசேனா எதையும் செய்யும் என்றும் குறிப்பிட்டார். சிவசேனாவை சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பதை விரைவில் காணலாம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்ட போதிலும், முதலமைச்சர் பதவி, துணை முதலமைச்சர் பதவிகள் குறித்து 3 கட்சிகளிடையே இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்ட பிறகே, உத்தவ் தாக்கரேயை சோனியா காந்தி சந்தித்து பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் சோனியாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாளை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் ஏற்பட்டதுபோல மோசமான அனுபவத்தை காங்கிரஸ் பெற விரும்பவில்லை என்றும், ஆதலால் ஆட்சியமைப்பதில் அவசரம் காட்ட போவதில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் மராட்டியத்தில் 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைப்பது மேலும் காலதாமதம் ஆகும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.