​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலை யாத்திரைக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published : Nov 17, 2019 11:37 AM

சபரிமலை யாத்திரைக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள்

Nov 17, 2019 11:37 AM

இன்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு விரதம் தொடங்கினார்கள்.

சென்னை 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். முன்னதாக செண்டை மேளம் முழங்க ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கடலூர் 

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்டனர்.

குற்றாலத்தில் அதிகாலையில் குவிந்த பக்தர்கள் அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியதால் சிற்றருவியில் நீராடி குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.

அருவிக்கரையில் உள்ள செண்பக விநாயகர், அம்பலவாண விநாயகர், சாஸ்தா கோவில்களிலும்,குற்றாலநாதர் ஆலயத்திலும் பூஜை செய்து மாலை அணிந்து பக்தர்கள் விரதம்தொடங்கினர்.

இதையொட்டி குற்றாலத்தில் சந்தன மாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்சம், துளசி மாலை என 12 வகையான மாலைகள், ஐயப்ப சாமி டாலர்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் அதிகாலையில் திரண்ட பக்தர்கள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பின்னர் பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலையணிந்து 48 நாள் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி கார்த்திகை முதல்நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் கோவில்களுக்கு சென்றும் குருசாமி முன்னிலையிலும் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

திருச்சி 

திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் கோவிலில், அதிகாலையிலே குவிந்திருந்த ஐய்யப்ப பக்தர்கள், நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து மாலையணிந்து விரதம் தொடங்கினர். இதேபோல் கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் உள்ள ஐய்யப்பன் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்து விரதத்தினை துவக்கி வைத்தார். முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் காவிரி கரையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குருசாமி தலைமையில் சரண முழக்கங்களுடன், மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் ஐயப்பன் திருக்கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினார்கள்.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் அய்யப்பசாமி உற்சவரை பல்லக்கில் எடுத்துச்சென்று ஆறாட்டு நடந்தது.
பின்னர் அருவிநீரில் சரண கோஷம் முழங்க, உற்சவர் முன்பு குருசாமி கையால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ செளடாம்பிகா ஜயப்ப பக்த சபையில் உள்ள ஜயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. எராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் குவிந்து இருந்த ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடினர். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் மற்றும் வல்லப விநாயகர் சன்னதியில் துளசி மாலை அணிந்து சரண கோஷங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் மற்றும் நகரீஸ்வரர் கோவிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கோவில் அர்ச்சகர்களிடமும், குருசாமிகளிடமும் துளசி மணி மாலைகளை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

திருப்பூர்

திருப்பூரில் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.