​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிரை காக்கமாட்டான் குடிகார தோழன்..! சாகும் நேரத்திலும் வீடியோ

Published : Nov 16, 2019 8:14 PM



உயிரை காக்கமாட்டான் குடிகார தோழன்..! சாகும் நேரத்திலும் வீடியோ

Nov 16, 2019 8:14 PM

ர்நாடக மாநிலம் கல்புர்கி அருகே கல்குவாரி நீருக்குள் மூழ்கி விளையாடியபோது கைக்கு எட்டும் தூரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நண்பனை காப்பாற்ற முயலாமல், செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்களுடன் போதையில் திளைத்தவர்,  நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் ஜப்ராபாத் பகுதியில் மிகவும் ஆழமான கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. ஜாபர் என்பவர் அவரது நண்பர்கள் 3 பேருடன் இந்த பகுதிக்கு சென்றுள்ளார்.

நண்பர்கள் அனைவரும் வார இறுதி நாளை கொண்டாட மூக்குமுட்ட குடித்து பொழுதை கழித்துவிட்டு ஒவ்வொருவராக கல்குவாரி குட்டைக்குள் குதித்து நீச்சலடித்துள்ளனர்.

நண்பர்கள் பத்திரமாக கரையேறிவிட, ஏற்கனவே மணிகணக்கில் நீச்சலடித்த சோர்வு மற்றும் தெளியாத மது போதையில் ஜாபர் மீண்டும் கல்வாரி குட்டைக்குள் குதித்துள்ளார்.

சிறிது தூரம் நீச்சல் அடித்த ஜாபர் கரைக்கு திரும்ப நீச்சல் அடித்து வந்த போது அதனை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், நீருக்குள் மூழ்கி மூச்சை அடக்க முடியுமா என்று கேட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது தொடர்ந்து நீச்சலடிக்க இயலாமலும், கரையை நெருங்க இயலாமலும் பரிதவித்த ஜாபர் நீரில் மூழ்கத் தொடங்கினார்.

கைக்கு எட்டும் தூரத்தில் கல்குவாரி குட்டையையொட்டி ஒரு நண்பர் நின்றிருந்த நிலையில் நீரில் மூழ்கும் ஜாபரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

மற்றொரு நண்பரோ இந்த பதை பதைப்பான சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் குடிகார நண்பர்களின் கண் எதிரிலேயே ஜாபர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதையடுத்து தனது நண்பர் நீரில் மூழ்கி வெகு நேரமாக வெளியே வராததால் அவர் உயிரிழந்து விட்டதை தாமதமாக உணர்ந்த போதை நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஜாபரின் சடலம் மீட்கப்பட்டது.

விசாரணையில், தனது நண்பர் ஜாபர் நீருக்குள் மூழ்கி மூச்சை அடக்குவதாக நினைத்துக் கொண்டு கரையில் இருந்ததால் காப்பாற்ற முயலவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

2 குடிகார நண்பர்களுடன் ஆழமான நீர் நிலைக்கு குளிக்க செல்வது. 100 முட்டாள்களுடன் புதிர் போட்டிக்கு செல்வதற்கு சமம் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!