​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிடிபட்டது “அரிசி ராஜா”

Published : Nov 14, 2019 6:27 AM

பிடிபட்டது “அரிசி ராஜா”

Nov 14, 2019 6:27 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மொத்தம் எட்டு பேரை மிதித்துக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். வீடுகளை சூறையாடி, ரேசன் அரிசியை விரும்பி உண்டு வந்ததால் அதற்கு அரிசி ராஜா என்ற பெயர் வந்தது. 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஊருக்குள் புகுந்த அந்த யானை, 4 பேரை மிதித்துக் கொன்றது.

இதை அடுத்து அப்போது பிடிக்கப்பட்ட அரிசி ராஜா டாப் சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஊருக்குள் புகுந்த அந்த யானை
நவமலை, சேத்துமடை, அர்த்தநாரிபாளையம் ஆகிய இடங்களில் 4 பேரை தூக்கி வீசி கொன்றதுடன், பலரை காயப்படுத்தியது. மொத்தம் 8 பேரை கொன்ற அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கவே, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, யானையைப் பிடிக்கும் பணியில் சுமார் 100 வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர். பருத்தியூர், அர்த்தநாரிபாளையம் வனப்பகுதியில் மறைந்து கொண்டு போக்கு காட்டிய அரிசி ராஜாவைப் பிடிக்க கலீம், பாரி என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அதில் பாரி என்ற யானைக்கு மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவே திருப்பி அனுப்பப்பட்டு கபில் தேவ் என்ற கும்கி அழைத்து வரப்பட்டது.

வனப்பகுதியில் மறைந்து கொண்டு தண்ணி காட்டிய அரிசி ராஜாவுக்கு நேற்றிரவு 11 மணி அளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சரியாக 6 மணி நேரம் கழித்து, அரை மயக்கத்தில் இருந்த அரிசி ராஜாவை, கும்கி கலீம் சமதளப் பரப்புக்கு அழைத்து வந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏறுவதற்கு மறுத்து அரிசி ராஜா அடம் பிடித்தது. அதை, கும்கி கலீம் பக்குவமாக லாரியில் ஏற்றியது.

பிடிபட்ட அரிசி ராஜா யானை, வரகளியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அதை வளர்ப்பு யானையாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே, அரிசி ராஜாவைப் பிடிக்க உதவிய கலீம் என்ற கும்கிக்கு பாராட்டு குவிகிறது. எட்டரை அடி உயரம் கொண்ட கலீமின் எடை 5.5 டன். 1972 ஆம் ஆண்டில் ஏழு வயதாக இருந்த போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிடிபட்ட கலீம், கும்கியாக மாற்றப்பட்டது.

இதுவரை 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் கலீம் ஈடுபட்டுள்ளது. இதில் எந்த ஒரு பணியிலும் கலீம் தோற்றதில்லை என்று வனத்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பதற்றமின்மை, நிதானம், எப்படிப்பட்ட காட்டு யானைகளையும் அடக்கும் வல்லமை, பணியின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பது என மற்ற கும்கிகளை விட கலீமுக்கு சிறப்பு பண்புகள் இருப்பதாக வனத்துறையினர் பாராட்டியுள்ளனர்.