திருவள்ளூர் அருகே மாட்டை ஏரியில் குளிக்க வைக்கும் போது சேற்றில் சிக்கிய மகளும் அவரை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேப்பம்பட்டுவைச் சேர்ந்த சுகுணா மற்றும் அவரது மகள் ரோஜா அருகில் இருந்த ஏரியில் மாட்டை குளிக்க வைக்க நேற்று சென்றுள்ளனர். அப்போது ஏரி சேற்றில் ரோஜா சிக்கியதாகவும் அதை பார்த்த தாய் சுகுணா காப்பாற்ற முயன்றதாகவும் இதில் தாயும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தாய் மற்றும் சகோதரியை இரவு முழுவதும் தேடிய சுகுணாவின் மகன், ஏரியில் சடலமாக இருவரும் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.