​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநர் அழைப்பு.. பாஜக ஆலோசனை..!

Published : Nov 10, 2019 11:18 AM

ஆளுநர் அழைப்பு.. பாஜக ஆலோசனை..!

Nov 10, 2019 11:18 AM

காராஷ்டிராவில் ஆட்சியமைக்க தயாரா என ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்பது குறித்து, அம்மாநில பாஜகவின் முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும், சிவசேனாவும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியில் சிவசேனா பங்கு கேட்பதால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சனிக்கிழமையோடு அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 105 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சியமைக்க தயாரா என ஆளுநர் ஸ்ரீ பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆளுநரின் நடவடிக்கைக்கு சிவசேனாவும் வரவேற்பு தெரிவித்தது.

புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஆளுநர் இறங்கியிருப்பது மகிழ்ச்சி என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இந்நிலையில் ஆளுநரின் இந்த அழைப்பை ஏற்பதா, இல்லையா, பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பது குறித்து மகாராஷ்டிர பாஜகவின் முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதனிடையே ஆட்சியமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பது குறித்து ஆளுநர் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாஜக ஆட்சியமைத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகவும், பாஜக ஆட்சி கவிழ்ந்துவிட்டால் மாற்று அரசை அமைக்க முயற்சிக்கப் போவதாகவும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 12ம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சிவசேனா எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையிலுள்ள ரிசார்ட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், ஓர்லி தொகுதி எம்.எல்.ஏவுமான ஆதித்யா தாக்கரேவும் தங்கியுள்ளார்.

மேலும் தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க நினைக்கும் பாஜகவின் அனைத்து முயற்சிகளும் தடுக்கப்படும் என சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாஜக ஹிட்லர் போல் செயல்படுவதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா ஒன்றும் டெல்லிக்கு அடிமை இல்லை எனவும் சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் ஒன்றும் மகாராஷ்டிராவுக்கு எதிரி அல்ல என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து கட்சிகளுக்கும் சில விஷயங்களில் முரண்பாடு இருக்கும் என தெரிவித்துள்ள அவர், மகாராஷ்டிராவில் வலுவான அரசை கொண்டு வருவது குறித்து காங்கிரஸ் முடிவெடுத்தால், அது மாநிலத்தின் நலனுக்கு நல்லது எனவும் கூறியுள்ளார்.