​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வருவதை தடுக்கும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு

Published : Nov 09, 2019 4:59 PM

ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வருவதை தடுக்கும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு

Nov 09, 2019 4:59 PM

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதைத் தடுக்கும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மாநகர போக்குவரத்து கழக திருவொற்றியூர் பனிமனையை சேர்ந்த ஓட்டுனர் கண்ணபிரான், மது போதையில் பேருந்தை ஒட்டிச் சென்று, பாதி வழியில் நிறுத்தி பயணிகளை வேறு பேருந்தில் பயணிக்க வற்புறுத்தியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், பெயரை கெடுத்ததாகவும் கூறி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கண்ணாபிரான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.

இதை எதிர்த்து போக்குவரத்து கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது. மனுவை  விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவின்படி, போக்குவரத்து கழகம் தாக்கல் செய்த அறிக்கையில், பணிக்கு வரும் போது ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை கருவி மூலம் சோதனை செய்த  பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பேருந்துகளில் திடீர் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், குடி போதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதில்  கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.