​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published : Nov 09, 2019 3:20 PM

கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Nov 09, 2019 3:20 PM

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்த வழித்தடத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் திறந்துவைத்தார்.

சீக்கியமதத் தலைவர்களில் ஒருவரான குருனானக் தனது எஞ்சிய நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு செல்ல இந்தியாவின் தேராபாபா நானக்கில் இருந்து, பாகிஸ்தானின்  பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாராவுக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில், 4 புள்ளி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. குருநானக்கின் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி  திறந்துவைத்தார். 

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட 500 யாத்திரிகர்கள் முதற்கட்டமாக, கர்தார்பூருக்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் மோடி சந்தித்தார். அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, பாகிஸ்தானில், கர்தார்பூர் வழித்தடத்தை, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டிருப்பது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.