​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீர் - முதலமைச்சர் அறிவிப்பு

Published : Nov 09, 2019 1:27 PM

100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீர் - முதலமைச்சர் அறிவிப்பு

Nov 09, 2019 1:27 PM

மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த 615 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் கொங்கனாபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு 25 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், 18 கோடியே 89 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 43 பணிகளை தொடங்கியும் வைத்த முதலமைச்சர், 112 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 116 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 24 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை திறந்தும் வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் 9,72,214 மனுக்கள் பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார். அவற்றில் 5,11,186 மனுக்கள் ஏற்கப்படுள்ளது என்றும் 4,37,492 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேட்டூர் அணை உபரிநீரை 4 சட்டமன்ற தொகுதிகளும் பயன்படுத்தும் வகையிலான திட்டத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டுக்குள் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறிய முதலமைச்சர், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். காவிரி - குண்டாறு திட்டத்துக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்படும் என்று கூறிய அவர், அதன் மூலம் புதுகோட்டை, சிவகங்கை, திண்டுகல், தேனி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் என்றார்.

தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், உதவித் தொகை பெறுபவர்களுக்கான சொத்து மதிப்பு வரம்பு, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் என உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எடப்பாடி அடுத்துள்ள வெள்ளரி வெள்ளி பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு 40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஏரியை பார்வையிட்டார். போதிய மழையின்றி வெள்ளரி வெள்ளி ஏரி கடந்த 1979க்குப் பிறகு நிரம்பவில்லை என்று கூறப்படுகிறது. குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, நீர்வழிப்பாதைகளும் தூர்வாரப்பட்டன.

அத்துடன் மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு கரை கால்வாய் வழியே வந்து வயலில் பாய்ந்து உபரிநீராக வெளியேறிய நீரும் குழாய் மூலம் ஏரிக்கு கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டது.

இதனையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டிய வெள்ளரி வெள்ளி ஏரியில் நேற்று ஆடுகளை பலிகொடுத்து அப்பகுதி மக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர், நீரில் பூக்களைத் தூவி வழிபட்டார்.