​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தி தீர்ப்பு - தலைவர்கள் கருத்து

Published : Nov 09, 2019 12:08 PM

அயோத்தி தீர்ப்பு - தலைவர்கள் கருத்து

Nov 09, 2019 12:08 PM

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

பிரதமர் மோடி:

அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ராமர் பக்தராக இருந்தாலும், ரஹீம் பக்தராக இருந்தாலும் தேச பக்தியை பலப்படுத்த வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார். 

அயோத்தி வழக்கில் குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, எந்த ஒரு பிரச்சனைக்கும் சட்ட நடவடிக்கைகள் மூலம் இணக்கமாக தீர்வு காண முடியும் என்பதற்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டு எனக் குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்பானது, நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் உறுதி செய்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவாக எடுத்துரைப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

நூற்றாண்டுகள் கடந்த ஒரு பிரச்சனையை நீதிமன்றம் இணக்கமாக முடித்து வைத்திருப்பதாகக் கூறிய மோடி, ஒவ்வொரு தரப்பும் தங்களது வாதங்களை முன் வைக்க போதிய அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

தீர்ப்புக்குப் பின்னர் 130 கோடி மக்கள் கடைபிடிக்கும் அமைதி, இந்தியாவின் உள்ளார்ந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். ராமர் பக்தராக இருந்தாலும், ரஹீம் பக்தராக இருந்தாலும் தேச பக்தியை பலப்படுத்த வேண்டியது கட்டாயம் எனவும், இந்த ஒற்றுமை உணர்வு நமது நாட்டை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி:

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை  அனைவரும் மதிப்பதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை, அன்பை பேணி காக்க வேண்டிய தருணம் இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பினராயி விஜயன்:

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் அயோத்தி நிலம் தொடர்பான சட்டபூர்வமான விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியர்களாகிய நாம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பணிந்து நடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் என நம்புவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கிய பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகதன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று உறுதியாக நம்புவதாகவும் அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நிதிஷ் குமார்:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சமூக நல்லிணக்கத்திற்கு இது பயனளிக்கும் என்றார். இதுதொடர்பாக இனியும் பிரச்சனை நீடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

ராஜ்நாத் சிங்:

பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அதே சமயம் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிதின் கட்கரி:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொருவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த்:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை தான் மதிப்பதாக குறிப்பிட்டார். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றும் ரஜினி கேட்டுக்கொண்டார்.

மோகன் பகத்:

தீர்ப்பை யாரும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்,  கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளை மறப்போம். அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோயில் கட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.