​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களின் போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது

Published : Oct 30, 2019 11:58 AM

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களின் போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது

Oct 30, 2019 11:58 AM

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம், ஆறாவது நாளை எட்டியுள்ளது. 

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 25ந் தேதி முதல் தமிழக முழுவதும் அரசு மருத்துவர்கள், வேலை நிறுத்தம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை தவிர மற்ற பணிகளை புறக்கணித்துள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்துடன் தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. டாக்டர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும், போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், தங்களுடன் அரசு இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தைத் தொடர்கிறது. ஆறாவது நாளாக அவர்கள் போராடி வருகின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

90 விழுக்காடு மருத்துவர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும் அந்தக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தை அழைத்து அரசு பேசி இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். வாயில் கருப்புத் துணி கட்டி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 400 மருத்துவர்கள் பணிக்கு வரவேண்டும் என்ற நிலையில், 200 பேர் மட்டுமே வந்திருந்தனர். வராதவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 80 சதவீதம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் , பிரசவம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.  புற நோயாளிகள் பிரிவுகளில் மருத்துவர்கள் பணியில் இல்லை. 

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், போராட்டத்திற்கு யாரும் செல்லாத வகையில், தங்களின் அனுமதியின்றி, மருத்துவர்கள் யாரும் விடுப்பு எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கையையும் மீறி, தங்களுக்கான பணிகளை விட்டுவிட்டு, போராட்டத்தில் பங்கேற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், பணிபயிற்சி நிறைவு சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், பணி நீட்டிப்பு உள்ளிட்டவை கிடைப்பதற்கு, பாதகமாகிவிடக் கூடும் என்பதை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்ட விவகாரம் குறித்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து விட்டது.
மருத்துவர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் பலர் உரிய சிகிச்சையின்றி உயிரிழக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், எனவே இதுதொடர்பாக தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டுமெனவும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு முறையிட்டார்.

அதற்கு, நீதிபதிகள், ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டினர். தேவையெனில் மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனக்கூறிய நீதிபதிகள், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டனர்.

இதனிடையே சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு சாரா சேவை மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், அரசு மருத்துவர்களின் தொடர் போராட்டங்களால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறினர். நோயாளிகள் பாதிக்கப்படும் விதத்தில் போராடுவது நியாயமற்றது என அவர்கள் தெரிவித்தனர்.