​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published : May 01, 2018 8:25 PM

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

May 01, 2018 8:25 PM

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை முறையாகவும் விரைவாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், 3 நீதிபதிகள் குழுவை அமைக்குமாறு அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் 8 மாத குழந்தையை, 28 வயது உறவினர் வன்கொடுமை செய்த வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கியோர் அமர்வு, உயர்நீதிமன்றங்களுக்கு சில வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியது.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணை, அதற்குரிய சிறப்பு நீதிமன்றத்தில் விரைவாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து உயர்நீதிமன்றங்களிலும், 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து, குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்குகளை கண்காணித்து, விரைவுபடுத்த வேண்டுமென்றும், விசாரணையை தேவையின்றி ஒத்திவைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே திருத்தியமைக்கப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொதுமக்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையிலான வழிகாட்டி கையேட்டினை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான வன்கொடுமை நிகழ்ந்ததும், அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் பின்னர் 24 மணி நேரத்திற்குள் உள்ளூர் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தரும் வகையில், காப்பகம் அல்லது மருத்துவமனையில் சேர்த்து, பெண் மருத்துவர் மூலம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் குழந்தையிடம் வாக்குமூலம் பெறப்படும். குழந்தைகளுக்கு சாதகமான சூழல் உள்ள நீதிமன்றங்களில் ஓராண்டுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் மட்டுமே விசாரணையில் ஆஜராக வேண்டும். விசாரணை நடைமுறைகளில் குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையை நேருக்கு நேராக எந்த சூழலிலும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. குழந்தையுடன் உரையாடி தகவலை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கான நபரை நியமிக்கலாம்.