​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

Published : Oct 23, 2019 6:50 AM



120 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

Oct 23, 2019 6:50 AM

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து விநாடிக்கு 27,850 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி அன்று, 120 அடி என்ற உச்சபட்ச நீர்தேக்கும் அளவை மேட்டூர் அணை எட்டியது. அதன் பின்னர் செப்டம்பர் 24ஆம் தேதியும் மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் நீர்வரத்து சரிந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று முன்தினம் 117.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 8 மணிக்கு 119.33 அடியை எட்டியது.

இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. அணை வரலாற்றில் 44ஆவது தடவையாகவும், கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாகவும் அணை நிரம்பியதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 27 ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முன்னதாக 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட போது பூஜை நடைபெற்றது.

கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 27 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர்
ஆகிய 12 மாவட்ட காவிரி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர பகுதிகளில் வருவாய், பொதுப்பணி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.