​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை

Published : Oct 21, 2019 7:30 PM

கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை

Oct 21, 2019 7:30 PM

தமிழகத்தில் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில்  பரவலாக மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அதிகாலையில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகளும், அலுவலகங்களுக்குச் சென்றோரும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டாரத்தில் செம்பூர், அத்திப்பாக்கம், மாம்பட்டு, ஆராசூர், பொண்ணுர் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது . மழை காரணமாக வீரபாண்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று காவிரியில் கலக்கும் வழித்தடத்தில் 10 க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை திருப்பூர், ஈரோடு மாவட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, தாமிரபரணி, பரழியாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திக்குறிச்சி - சிதறால் மலைக்கோயில் செல்லும் சாலையில் வள்ளகடவு அருகே மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையில் மூத்துக்கல்லூர் கிராமத்தில் 3 குடியிருப்புகள் இடிந்து விழுநது தரைமட்டமானது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், நீர்இருப்பு 339.74 மில்லியன் கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 494 கனஅடி தண்ணீர் வருகிறது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம், கரியாப்பட்டினம் செட்டிப்புலம், நெய்விளக்கு, தோப்புதுறை, தேத்தாகுடி, செம்போடை ஆகிய பகுதிகளில் மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மெட்டல்வாடி தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் பாதையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செவ்வாய்கிழமை கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்ற “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல அடுத்த இரு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை, பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ், தலைக்குந்தா உட்பட பல்வேறு பகுதிகளில் மதியம் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே நீலகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்கிழமை “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதை அடுத்து கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

57 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 53 அடியில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 55 அடியில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உபரி நீர் ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பெருஞ்சாணி அணை அபாய அளவை எட்டியதை அடுத்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 75 அடியை எட்டும் வேளையில் உபரிநீர் திறந்துவிடப்படும்.

இதனால் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளான சிதறால், திக்குறிச்சி, ஞாறாம்விளை, குழித்துறை, பார்திவபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் இன்று இரவு 102 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் இரவு 11 மணி அளவில் உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.