ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
Published : Oct 21, 2019 6:57 PM
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடைபெற்றதாக கூறி, ப.சிதம்பரத்தை, சிறையில் வைத்தே, அமலாக்கத்துறையும் கைது செய்திருக்கிறது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது 2 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையைத் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.
இதனை ஏற்றுக் கொண்டிருக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வருகிற 24ஆம் தேதி, ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கிடையே, தன்னை பிணையில் விடுவிக்க கோரி, ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.