​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு...

Published : Oct 21, 2019 7:09 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு...

Oct 21, 2019 7:09 AM

மிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடைபெற்று வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அந்தத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 275 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி, அந்தத் தொகுதியில் 32.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  299 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி அந்தத் தொகுதியில், 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தைச் சேர்ந்த 100 வயது முதியவரான வடிவேல் என்பவர், தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர். 

21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாது மக்கள் வாக்களித்து வருகின்றனர். அங்கு காலை 11 மணி நிலவரப்படி 28.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வரும் அதிமுக வேட்பாளர் நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த இடையூறும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாங்குநேரி தொகுதியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட சமூகத்தினர் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி இருப்பதுடன், தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளர், வாதிரியார், தேவேந்திர குலத்தான், குடும்பர், உள்ளிட்ட 7 பிரிவுகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் தேவேந்திர குல வேளாளர் என ஒரே சமூகமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. இதை வலியுறுத்தி, பெருமாள் நகர், உன்னன்குளம், கள்ளத்தி, ஆயர் குலம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த அந்த சமூகத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளை தோட்டத்தில் காங்கிரஸ் சார்பில் 5000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கியதாக 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடாவுக்கு டோக்கன் வழங்குவதாகக் கூறி, கருவடிக்குப்பம் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சிகளின் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லாஸ்பேட்டை போலீசார், சங்கர், சந்திரசேகரன், சித்தானந்தன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் மீது 188 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். டோக்கன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் 41.35 சதவீதமும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கேவிஆர் நகர் வாக்குச்சாவடி அருகே பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறப்படும் நபரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் வெளியூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி திமுகவினர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு காரில் வந்த சிலரையும் பணம் கொடுக்க வந்ததாகக் கூறி திமுகவினர் விரட்டியடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், திமுகவினரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பணம் கொடுத்ததாகக் கூறப்படும் நபரையும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 52.22 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. புதுச்சேரி காமராஜ் நகரில் 56.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வாக்கூரில் காலை 11 மணிக்குப் பிறகு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அந்த ஊரில் மொத்தம் 535 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் ஆவர். அவர்களில் 350 பேர் காலை 11 மணிக்கு முன்னதாக வாக்களித்து விட்டனர். அதன் பிறகு கடந்த 5 மணி நேரமாக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இதனிடையே கடம்போடு வாழ்வு என்ற ஊரில் இருந்து டோணவூர் செல்லும் வழியில் தேர்தல் அதிகாரிகள் பயணம் செய்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. காருக்குள் சிக்கி இருந்த தேர்தல் அதிகாரிகளை நாங்குநேரி சுயேட்சை வேட்பாளர் ஹரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில், கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது வாக்குச்சாவடி அருகே பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. பூத் கமிட்டியின் செலவுக்கு வேட்பாளர் கொடுக்கும் பணத்தை பங்கு போடுவதில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பெரிய கட்சி யார் என்று கேட்டு இருவரும் தாக்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்தச் சண்டையில் சேகரின் சட்டை கிழிந்தது.