​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Published : Oct 21, 2019 6:44 AM

15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Oct 21, 2019 6:44 AM

சென்னை, தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையில் நேற்று அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. நள்ளிரவில் தேனாம்பேட்டை, தியாகராயநகர், சூளைமேடு, திருவல்லிக்கேணி, கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

தேனி மாவட்டம் போடி, கோடாங்கிபட்டி, முந்தல், குரங்கணி, தேவாரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விழுப்புரம், கடலூர், நாகை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. இதனிடையே,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே அதிகாலை முதல் பெய்து வருவதால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோன்று கோவை மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சுமார் ஏழு மணியளவில் தொடங்கிய மழை 9 மணி வரை நீடித்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும், அலுவலகங்களுக்குச் செல்வோரும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

டகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளதையடுத்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 169 கன அடி அதிகரித்துள்ளது.

நேற்று 125 புள்ளி 30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 126 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு  2 ஆயிரத்து 302 கனஅடியாக இருந்தநிலையில் இன்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 169 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் நீர்இருப்பு 3 ஆயிரத்து 834 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 46 புள்ளி 8 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால்
சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோதையாறு, தாமிரபரணி, பரழியாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனிடையே திக்குறிச்சி - சிதறால் மலைக்கோயில் செல்லும் சாலையில் வள்ளகடவு பகுதியில் மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பால் வெள்ளம் செல்ல வழியில்லாமல் தெருக்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து மழை பெய்துவருவதால், பள்ளி கல்லலூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிபோர் விளை என்ற இடத்தில் 85 மில்லிமீட்டர் மழையும், சுருளோட்டில் 83 புள்ளி 4 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. காந்திபுரம், உக்கடம், சாய்பாபா கோவில், கவுண்டம்பாளையம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள வீரபாண்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. இரவு முழுதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி மற்றும், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கன மழை பெய்துவருவதால் தூவானம் அணை நிரம்பி உபரி தண்ணீரும், ஈத்தக்காடு, மற்றும் அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவியில் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிபகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று அதிகாலையில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து காலையிலும் மழை தூற ஆரம்பித்து, விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியுடன் இதமான சூழல் நிலவுகிறது.

தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்தநிலையில், இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினை தீர்ந்ததாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதியான குளச்சல், முட்டம், குறும்பனை,புதூர், அழிக்கால் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம்,வள்ளம், நாட்டுப்படகு மீனவர்களும் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் அலை சீறிப்பாய்வதால் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை குளச்சல் மற்றும் முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு எடுத்துச்சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்து வருகின்றனர் இதேபோல் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதியான தக்கலை அழகியமண்டபம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டாரத்தில் செம்பூர், அத்திப்பாக்கம், மாம்பட்டு, ஆராசூர், பொண்ணுர் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரசின் குடிமராமத்து திட்டத்தால் தூர்வாரிய ஏரி குளங்களில் நீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மழை நிலவரத்தையும், அணைகளின் நிலவரத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபடவேண்டும் என முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கோவை மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பேளூர் மற்றும் கோவை புறநகர் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நொய்யல் ஆற்று வெள்ளம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக காவிரியில் கலக்கும் நிலையில், வழி நெடுகிலும் உள்ள 10 க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை திருப்பூர், ஈரோடு மாவட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகள், மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர் மழையல் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியிலும் வெள்ளமென தண்னீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் 2 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. வெள்ளத்தில் அருவியில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பி சேதமடைந்துள்ளது.

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியான காரமடை, வெள்ளியங்காடு, தாயனூர்,புங்கம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் ஓடுகிறது.

இந்நிலையில் மூத்துக்கல்லூர் கிராமத்தில் 3 குடியிருப்புகள் இடிந்து விழுநது தரைமட்டமானது. மழையின்போது வீட்டில் விரிசல் ஏற்படுவதை கவனித்து வெளியேறியதால் உயிர் தப்பியதாகவும், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகேஉள்ள மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் கொடைக்கனல் மலைப் பகுதியில் காற்றாறுகளில் இருந்து அருவிகளாக தண்ணீர் கொட்டுகிறது.

அந்த தண்ணீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேருவதால் 57 அடி உயரம் கொண்ட அனையின் நீர்மட்டம் 50 அடியாகவும், நீர்இருப்பு 339 புள்ளி 74 மில்லியன் கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 494 கனஅடி தண்ணீர் வருகிறது. அனையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை.