​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை வாக்குப்பதிவு...

Published : Oct 20, 2019 8:48 AM

நாளை வாக்குப்பதிவு...

Oct 20, 2019 8:48 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இறுதிக்கட்டமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்தார். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர் உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆகியோர் இறுதிகட்ட பிரசாரம் செய்தனர்.

மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 1,400 பேர் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 225 வாக்குச் சாவடிகளில் 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 1,000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.

இரு தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் உள்ள 275 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இன்று காலை விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலை முனையில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.

பாதுகாப்புக்கு 3 கம்பெனி மத்திய துணை ராணுவ படையினர், 7 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியிலும், இறுதிக்கட்ட தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து, 32 வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தேர்தல் அலுவலரும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான அருண், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், புதுச்சேரி ஆட்சியர் அருண் தெரிவித்தார். 

இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் திட்டமிடுவதாகவும், எனவே, வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அதிமுக புகார் மனு அளித்திருக்கிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து, இந்த மனுவை வழங்கியிருக்கிறார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாபு முருகவேல், தொகுதியில், வெளியூர் ஆட்கள் தங்கியிருக்க கூடாது என தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி, திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர், விக்கிரவாண்டி பகுதியில் தங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.