​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்...

Published : Oct 19, 2019 5:00 PM

ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்...

Oct 19, 2019 5:00 PM

இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர் உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 1,400 பேர் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 225 வாக்குச் சாவடிகளில் 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 1,000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.

இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் திங்கட்கிழமையன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.