​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
INX Media Case : இந்திராணி முகர்ஜி ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தகவல்

Published : Oct 19, 2019 12:09 PM



INX Media Case : இந்திராணி முகர்ஜி ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தகவல்

Oct 19, 2019 12:09 PM

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டுக்கு உதவியதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்திக்கும் லஞ்சமாக இந்திராணி முகர்ஜி 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் பீட்டர் முகர்ஜி, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரிகள், ஆடிட்டர் பாஸ்கரராமன் உள்ளிட்ட 10 பேர் மீதும், 4 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, ஆவண மோசடி, லஞ்சம் பெறுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர்களில் ஒருவரும், மகள் ஷீனோபோராவை கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் உள்ளவருமான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக இடம்பெற்றுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், அனுமதிக்கப்பட்ட 4.62 கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீட்டுக்கு பதில், 403 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டைப் பெற்றதாகவும், விதிகளை மீறி ஐஎன்எக்ஸ் நியூஸ் என்ற மற்றொரு நிறுவனத்தில் 41 கோடி ரூபாயை முதலீடு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களான பீட்டர் முகர்ஜியும், இந்திராணியும், ப.சிதம்பரம், கார்த்தி மற்றும் சில அதிகாரிகளுடன் இணைந்து குற்றச்சதியில் ஈடுபட்டு, நடவடிக்கையில் இருந்து தப்பியதாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான லஞ்சப் பணத்தை சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பெறுவதற்காக, ஏஎஸ்சிபிஎல் என்ற நிறுவனத்தை கார்த்தி தொடங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைகேட்டிற்கு உதவியதற்காக ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 35 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்ததாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ கூறியுள்ளது.

சிங்கப்பூர், மொரீஷியஸ், பெர்முடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வைத்து கைமாறியதாக இந்திராணி முகர்ஜி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நீதித்துறை விசாரணைக்கு உதவுமாறு 5 நாடுகளுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.