​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பறவைகளை பாதுகாக்க 60 ஆண்டாக பட்டாசு இல்லாத கிராமம்..!

Published : Oct 19, 2019 11:16 AM

பறவைகளை பாதுகாக்க 60 ஆண்டாக பட்டாசு இல்லாத கிராமம்..!

Oct 19, 2019 11:16 AM

சிவகங்கை மாவட்டத்தில் இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்துக்கு வந்து குவியும் காரணத்தினால் பறவைகளுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 60 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் கொண்டாட்டத்தையே தியாகம் செய்து வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி கண்மாயில் சுமார் 250 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுபறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகை தந்து குஞ்சுகளுடன் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்று விடுகின்றன.

கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பறவைகள் அதிகளவில் வரவில்லை. வந்த பறவைகளும் கூடு கட்டாமல் டிசம்பர் மாதத்திலேயே இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றன. இந்நிலையில் தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருவதால் சரணாலயம் பசுமையாக இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கிறது.

தற்போது உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தந்துள்ளன . செப்டம்பர் மாதத்தில் இருந்தே வருகை தந்த பறவைகள் திரும்பி செல்லாமல் உள்ளது .

இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிரித்துள்ளதுடன், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிநாட்டு பறவைகளுக்காக இந்த கிராம மக்கள் 60 ஆண்டுகளாக தீபாவளிக்கு மட்டும் அல்ல, எந்த விழாவாக இருந்தாலும் பட்டாசு வெடிக்காமல் இருக்கும் வழக்கத்தை கடை பிடித்து வருகின்றனர்.

பட்டாசு வெடிச்சத்தம் பறவைகளுக்கு பிடிக்காது. மிரண்டு பறந்து விடும் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று கூட பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில்லை.

சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட பரண்கள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும், சிதிலமடைந்த சிறுவர்கள் பூங்காவை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தங்கள் கிராமத்தில் உள்ள ஏராளமான வவ்வால்களுக்காக ஆண்டுதோறும் பட்டாசு இல்லாத தீபாவளியை ஊர்மக்கள் கொண்டாடி வருகின்றனர். காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள வவ்வால்தோப்பு என்ற இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள 5 புளிய மரங்களில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால் குடிகொண்டுள்ளன.

பட்டாசு சத்தம் கேட்டு வவ்வால்கள் அங்கிருந்து சென்றுவிடும் என்பதால் 50 ஆண்டுகளாக அந்த ஊரில் பண்டிகை காலம், திருவிழாக்கள் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். வேறு இடத்துக்கு சென்றோ உறவினர்கள் வீட்டுக்குச் சென்றோ பட்டாசு வெடித்து தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.