​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த வாரம் முதல் சென்னையின் குடிநீர் விநியோக அளவு அதிகரிப்பு - அமைச்சர்

Published : Oct 18, 2019 1:32 PM

அடுத்த வாரம் முதல் சென்னையின் குடிநீர் விநியோக அளவு அதிகரிப்பு - அமைச்சர்

Oct 18, 2019 1:32 PM

சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவைக்காக, அடுத்த வாரம் முதல் கூடுதலாக 12 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும், இதன்மூலம், மொத்த குடிநீர் விநியோக அளவு 65 கோடி லிட்டராக அதிகரிக்கும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை நாளொன்றுக்கு சுமார் 80 கோடி லிட்டர் வீதம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்து, சென்னையின் நீராதார ஏரிகள் வறண்டதால் தண்ணீர் விநியோகிக்கும் அளவு குறைக்கப்பட்டு, சுமார் 53 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தினந்தோறும் விநியோகிக்கப்பட்டது.

அண்மையில், சென்னைக்கு வந்து சேர்ந்த கிருஷ்ணா நதிநீர் மற்றும் அதனை தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, வருகிற திங்கட்கிழமை முதல், சென்னை பெருநகரில், நாள்தோறும் வினியோகிக்கும் தண்ணீர் அளவு 65 கோடி லிட்டராக அதிகரிக்கப்படும் என்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்திருக்கிறார்.