​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

Published : Oct 18, 2019 1:32 PM

பணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

Oct 18, 2019 1:32 PM

நாங்குநேரி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீதும், எம்.எல்.ஏ வை தாக்கியதாக கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அம்பலம் கிராமத்தில் பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தங்கி இருந்து தேர்தல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள கல்லத்தி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி அப்பகுதி மக்கள் விரட்டிய போது இருவரும் எம்.ஏல்.ஏ சரவணகுமார் தங்கி இருந்த வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டனர். விரட்டிச்சென்ற இளைஞர்கள் கதவை உடைத்து திறந்தபோது உள்ளே இருந்து வந்த எம் எல் ஏ வுடன் மோதல் ஏற்பட்டு அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எம் எல் ஏ வை வீட்டுக்குள் தள்ளி பூட்டி வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் எம் எல் ஏ வை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கே சிதறி கிடந்ததாக கூறி பொதுமக்கள் கொடுத்த 2,78,000 ரூபாயை கைப்பற்றி பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீது ஜனநாயகத்திற்கு விரோதமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் ((143,171இ,171பி,173,Rp act)) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல சட்டமன்ற உறுப்பினரை தாக்கியதாக அம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சீனிராஜ், முருகேஷ் உள்ளிட்ட 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் ((147,448,323,329ipc)) மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தில் அருப்புக்கோட்டை குருந்தமடத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் மாரியப்பன் உள்ளிட்ட 2 பேர் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூபாய் 39,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மநேரி பகுதியில் பணம் கொடுத்துகொண்டிருந்த 5 பேர் பறக்கும் படையினரை பார்த்ததும் ரூபாய் 50,000த்தை கீழே போட்டு தப்பி ஓடிவிட்டனர். பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதற்கிடையே நாங்குநேரி தொகுதியில் பிடிபட்ட பணம் தங்களுடையது அல்ல என்றும், எதிர் தரப்பு பணத்தை கொண்டு வந்து வீசி விட்டு கதை கட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி நெல்லை மூலக்கரைப்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.