​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல இடங்களில் கனமழை

Published : Oct 18, 2019 11:43 AM

தமிழகத்தின் பல இடங்களில் கனமழை

Oct 18, 2019 11:43 AM

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடித்து வருகிறது.

சென்னை நகரில் 3 வது நாளாக நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அருகே உள்ள பொன்னங்கிபுரம் பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களும், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் அவதிக்குள்ளானார்கள். இப்பகுதியில் பல இடங்களில் கால்வாய் அடைப்பால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குன்னூர் - உதகை சாலை மற்றும் குன்னூர் - மஞ்சூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைதுறை மற்றும் தீயணைப்புதுறையினர் JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து வருகிறார்கள்.

குன்னூரில் தொடர் மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாகவும், உதகை - குன்னூர் இடையே வழக்கம்போல மலை ரயில் இயங்கும் என்றும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் குந்தா தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. மழையுடன் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் குழித்துறை மேற்கு ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் பயணச்சீட்டு அலுவலகத்துக்குள் மழை நீர் புகுந்து சேரும் சகதியாக காட்சியளிக்கிறது. இதனால் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்ததால் அவை அப்புறப்படுத்தப்பட்ட பின்பு ரயில்கள் தாமதமாக வந்து சென்றன. ரயில் நிலையம் செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக இருப்பதால் உடனே சீரமைப்பு பணிகளை துவங்குமாறும் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,  அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்சுழி நரிக்குடி, இலுப்பையூர், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் காலை முதலே பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது பலத்த மழையாக உருவெடுத்து சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் இந்த மழையின் காரணமாக  விவசாய பாசனத்திற்கு நீர் கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனமழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பழனியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அவதியுற்ற நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் அங்கு  பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. சாலையில் ஆறாக வெள்ளம் ஓடியது. இதனால் வெப்பம் தணிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான மொடச்சூர், புதுப்பாளையம் பேருந்து நிலையம்,குள்ளம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மேகம் மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் திடீரென குளிர்ந்த காற்று வீசத்தொடங்கி, மழை பெய்ய தொடங்கியது.