​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உச்சகட்டத்தை எட்டியுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரம்..!

Published : Oct 18, 2019 10:16 AM

உச்சகட்டத்தை எட்டியுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரம்..!

Oct 18, 2019 10:16 AM

விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர.

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனாதை குழுக்களாகி விட்டதாகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட எழும் செம்பொன் பகுதியில் மு க ஸ்டாலின் இன்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு திரட்டினார். 

இடைத்தேர்தலில் திமுகவினர் பணம் கொடுத்தது வெட்டவெளிச்சமாகியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2 வது கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளதையொட்டி, அமைச்சர் ஆர்பி உதயகுமார், கேடிசி நகரில் பொதுமக்களுக்கு, குங்குமம், சந்தனம், பூ, இனிப்பு வழங்கி முதல்வரை வரவேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். கோதைச்சேரியில் அவர் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் உரையாடியும், மண்வெட்டி எடுத்து மண்ணை வாரி ஏரியை தூர்வாரியும் நூதன முறையில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதுடன், இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழந்து வருவதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி பிரச்சாரத்தில் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து சிறுமளஞ்சி கிராமத்தில் சுடலையாண்டவர் கோவில் அருகே  திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய உதயநிதி கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பம்பை இசைக்கு ஏற்ப நடனமாடினார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்கு சேகரிக்க வரும் அதிமுக அமைச்சர்கள், அங்குள்ள மக்களுடன் சேர்ந்து நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விக்கிரவாண்டியை அடுத்த பனமலைப்பேட்டை பகுதிக்கு வாக்கு சேகரிப்புக்காக வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பம்பை இசைக்கு ஏற்ப ஒயிலாட்டம் ஆடி அசத்தினார். அமைச்சருடன் சேர்ந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நடனமாடினர். 

இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில், நாளை மாலை 6 மணிக்கு பரப்புரை முடிவடைவதால், வெளியூர்களிலிருந்து பரப்புரைக்கு வந்துள்ள அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இரண்டு தொகுதிகளிலும், பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் முடிவுடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாங்குநேரியில் நேற்று பணப்பட்டு வாடா நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விரிவான அறிக்கை கேட்டிருப்பதாகவும், சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில், 139 வாக்குப்பதிவு மையங்களில், 275 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில், 170 வாக்குப்பதிவு மையங்களில், 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருப்பதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவால் துரோகி என்று புறக்கணிக்கப்பட்ட என் ஆர் காங்கிரசுடன் அதிமுக கூட்டணி வைக்கலாமா என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கேள்வி விடுத்துள்ளார். காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து  கிருஷ்ணா நகர் பகுதிகளில் முதலமைச்சர் நாராயணசாமி வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவிக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி உள்ளதாகவும், இந்த விஷயத்தில்  கவர்னரை கட்டாயப்படுத்த முடியாத நிலையில், தொடர்ந்து விடுதலைக்கான அழுத்தம் கொடுத்து வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு முறையை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக தான் என்றும் அவர்கள் கொண்டு வரவில்லையென்றால் தமிழகத்திற்கு நீட் வந்திருக்காது என்றும் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஏழசெம்பொன் பகுதியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர்கள், அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். பிரசாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியபோது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் களக்காடு, மஞ்சுவிளை, கீழசடையமான்குளம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தமிழகத்தில் தற்போது அமைதியான,மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுகின்ற ஆட்சி நடைபெற்று வருவதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் முண்டியம்பாக்கத்தில் அவர் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்துப் பேசினார்.