​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குர்து படைகள் திரும்பிச் செல்ல 120 மணி நேர போர் நிறுத்தம்

Published : Oct 18, 2019 7:36 AM



குர்து படைகள் திரும்பிச் செல்ல 120 மணி நேர போர் நிறுத்தம்

Oct 18, 2019 7:36 AM

சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்குத் திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர போர்நிறுத்தத்திற்கு உடன்படிக்கையை எட்டியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக,அமெரிக்காவிற்கு துணை நின்று போராடிய குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரெய்ன், உள்ளிட்ட உயர்மட்டக்குழு ஒன்று துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்டோகனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிரியாவில் இருந்து அமெரிக்கா தனது ஆயுதப் படைகளை திரும்ப அழைத்த பின்னர் இரு தரப்பிலும் நிகழ்ந்த முக்கியமான உடன்படிக்கையாக இது கருதப்படுகிறது.

துருக்கியின் தாக்குதலில் இருந்து பின்வாங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல குர்து படைகளுக்கு 120 மணி நேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நிரந்தர போர் நிறுத்தம் செய்யவும் துருக்கி முன்வந்துள்ளதால், இது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த முடிவால் சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதி திரும்பும் என்றும் குர்து இனத்தவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து துருக்கி மீது விதித்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதாக துணை அதிபர் பென்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.