​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா?

Published : Oct 17, 2019 5:01 PM

பெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா?

Oct 17, 2019 5:01 PM

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடி அலைந்து வருகின்றனர்.

இறப்பதற்குள் பிள்ளைகளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதியை பற்றிய செய்தி தொகுப்பை காண்போம்.

நாகர்கோவில் அடுத்துள்ள கோட்டாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் கணேசன். குடை தைக்கும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மனைவி சரசு. இவர்களுக்கு லஷ்மி என்ற மகளும், சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு முன்பாக லஷ்மி ஒருவரை காதல் திருமணம் செய்துக் கொண்டு தனியாக சென்றுவிட்டார். அதன் பிறகு பெற்றோருடன் உறுதுணையாக இருந்த சத்தியராஜும் காதல் திருமணம் செய்து கொண்டு அவரும் பிரிந்து சென்றுவிட்டார்.

நாட்கள் கடக்க கடக்க இருவரும் தங்களது பெற்றோரின் நிலை குறித்து மறந்து விட, கணேசனும் சரசுவும் தனியாகவே காலத்தை கழித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பிள்ளைகளும் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் கூட கிடைக்காமல் பரிதவித்து வந்துள்ளனர் கணேசன் - சரசு தம்பதி.

இதனால் முதலில் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிள்ளைகளை தேடி அலைந்த அவர்கள், பின்னர் குமரி மாவட்டத்தையே சுற்றி வலம் வந்திருக்கின்றனர். கேரளாவிலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்துள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக தங்களது பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் ? எப்படி இருக்கிறார்கள் ? என்பதை அறிந்து கொள்ள ஊர் ஊராக சென்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதி, குடை மற்றும் செருப்புகளை தைத்தும் ஈயம் பூசியும் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்து பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழே தங்கியுள்ள இருவரும், வயது மூப்பு காரணமாக வேலை செய்ய முடியாததால் பிறரிடம் கையேந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இறப்பதற்குள் தங்களது பிள்ளைகளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அலைந்து திரியும் பெற்றோருடன், அவர்களது பிள்ளைகள் இருவரும் கரம் கோர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.