​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
களை கட்டிய இடைத்தேர்தல் பிரசாரம்..!

Published : Oct 16, 2019 12:15 PM

களை கட்டிய இடைத்தேர்தல் பிரசாரம்..!

Oct 16, 2019 12:15 PM

இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விக்ரவாண்டி, நாங்குநேரி, புதுவை காமராஜ் நகர் தொகுதிகளில் பிரசாரம் களை கட்டியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமரிசித்ததுடன், அவர் புதுச்சேரிக்கு வந்தால் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து ரெயின்போ நகர் பகுதியில் முதல் அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பியுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து காமராஜ் நகர், வாஞ்சிநாதன் நகர், ஜெபராஜ் நகர் பகுதிகளில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அமைச்சர் ஜெயக்குமார் கோதைசேரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர்கள் இனி ஆட்சிக்கு வரமுடியாது என்றார். மேலும் வழக்குகளில் சிக்கியுள்ள திமுகவினர் விரைவில் சிறை சென்று கம்பி எண்ணுவார்கள் என்றும், திமுக ஆட்சிக்கு வரும் என்ற அதன் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இட ஒதுக்கீட்டுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ஜவகர்லால் நேரு என்றும் அவரையடுத்து தான் பெரியார் போன்றவர்கள் குரல் கொடுத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு திரட்டிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஹிட்லர், முசோலினி பேச்சும் பிரதமர் மோடியின் பேச்சும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், ஒரே மொழி ஒரே நாடு என்பது இயற்கைக்கு எதிரானது என்றும், அந்த செயலை மத்திய அரசு செய்வதாகவும், கே எஸ் அழகிரி கூறினார்.