​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெங்களூர் போலீசார் வெளியிட்ட வீடியோ..! அத்துமீறி அபகரிப்பா..?

Published : Oct 15, 2019 9:12 PM

பெங்களூர் போலீசார் வெளியிட்ட வீடியோ..! அத்துமீறி அபகரிப்பா..?

Oct 15, 2019 9:12 PM

திருச்சி திருவெறும்பூர் அருகே காவிரி கரையோரம் மண்ணில் புதைத்து வைத்திருந்த நகைகளை பெங்களூரு போலீசார் ரகசியமாக வந்து மீட்டச் சென்ற நிலையில், அவற்றை பெங்களூரில் கொள்ளையடிக்கப்பட்டதாக காட்சிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ள கர்நாடக போலீசாரின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றைத் துளையிட்டு பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 13 கோடி ரூபாய் மதிப்புடையை நகைகைகளை கொள்ளையடித்து அதிரவைத்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகனை தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் அவன்சரணடைந்தான். இதையறிந்த திருச்சி போலீசார் பெங்களூரு சென்று கொள்ளையன் முருகனை காவலில் எடுக்கவும் திட்டமிட்டிருந்த நிலையில், பெங்களூரு போலீசார் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி திருவாரூர் முருகனை 6 நாட்கள் காவலில் எடுத்தனர். 

பெங்களூர் போலீசார் திருவாரூர் முருகனிடம் விசாரணை நடத்தி கொள்ளை நகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டனர். திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் காவலில் இருந்த திருவாரூர் முருகனை அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் 12 கிலோ நகைகளை மீட்டுச் சென்ற போது, திருச்சி போலீசாருக்கு தகவல் கிடைக்க பெரம்பலூர் அருகே சுற்றி வளைத்தனர்.

அவர்கள் வைத்திருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தான் என தெரிந்திருந்தும் நீதிமன்ற ஆணை பெங்களூர் போலீசாரிடம் இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்யமுடியவில்லை.

இந்த நிலையில் கொள்ளையன் முருகன் பெங்களூரிலும் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பதால், அந்த வழக்குகளிலும் மீட்கப்பட்டதாக கணக்கு காண்பித்து நகைகளை காட்சிப்படுத்தி வீடியோ வெளியிடுள்ளனர். மேலும், கைவிலங்குடன் திருவாரூர் முருகனை அழைத்து வந்து, நகைகள் புதைக்கப்பட்ட இடத்தை காண்பிக்க அவற்றை தோண்டி நகை பையை மீட்கும் காட்சிகளையும் பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 12 கிலோ தங்க நகைகளில் பெரும்பாலான நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை தான் என்பதை திருச்சி போலீசாரும் உறுதி செய்துள்ள நிலையில் பெங்களூர் போலீசாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறொரு மாநிலத்திற்கு செல்லும் போது, அந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை கூட பின்பற்றாமல் பெங்களூர் போலீசார் நடந்துகொண்டதாக தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் திருவாரூர் முருகனின் கூட்டாளிகளிடம் 6 கிலோ மட்டுமே மீட்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி போலீசார் மீதமுள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளனர்.

பெரம்பலூரில் நகைகளுடன் பெங்களூர் போலீசார் சிக்கிய போதே தமிழக போலீசார் நகைகளை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர். அவற்றை வைத்து நீதிமன்றம் மூலம் நகைகளை மீட்க திருச்சி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.