​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெங்கு - தமிழக அரசு அறிக்கை..!

Published : Oct 15, 2019 5:45 PM

டெங்கு - தமிழக அரசு அறிக்கை..!

Oct 15, 2019 5:45 PM

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதன் கூடுதல் செயலர் செல்வக்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவோர் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர காய்ச்சல் பிரிவு என தனிவார்டு இயங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வேலூர், கடலூர், திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மண்டலங்களில், டெங்கு காய்ச்சலை பரப்பும் எடிஸ் கொசு உற்பத்தியை கண்காணிக்க பூச்சியியல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தவும், அதன் உற்பத்தி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் தமிழகம் முழுதும் 28 ஆயிரத்து 147 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகம் என்று சொல்லும் வகையில், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக தமிழகம் முழுவதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு,

பொது மக்கள் டெங்கு பற்றிய சந்தேகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் 104 என்ற அவசர தொலைபேசி எண் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் தீவிர கண்காணிப்பின் மூலம் தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது என்ற போதிலும், சுகாதாரத்தை பேணிக் காப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை என்பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.