​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் பரவலாக மழை..!

Published : Oct 15, 2019 5:31 PM

தமிழகத்தில் பரவலாக மழை..!

Oct 15, 2019 5:31 PM

மிழகத்தில் நாளை மறு நாள் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதே பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரங்களான பூப்பெட்டி, நெய்விளக்கு, அகஸ்தியன் பள்ளி, தோப்புதுறை, தேத்தாகுடி, செம்போடை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி செய்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. 

ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் சாஸ்தா கோயில் அணை நிரம்பி உள்ளது. விவசாயத்துக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கண்மாய்களுக்கு நீர் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலையில் கனமழை பெய்து வருவதால் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, ஆவூர் உள்ளிட்ட இடங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான காளாப்பூர், பிரான்மலை, கிருங்காக்கோட்டை, மேலப்பட்டி, கண்ணமங்கலம், எஸ்.வி.மங்கலம், முறையூர், சூரக்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கோபி என்பவரை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள சுக்காம்பட்டி, இடையபட்டி, ஆலந்தூர், புங்கம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. காலை முதல் வெளுத்து வாங்கிய மழையால் மலையையொட்டியுள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புங்கம்பாடி அருகே தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வையம்பட்டி, மணப்பாறை செல்ல முடியாமல் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளானர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரங்களான அம்மாபாளையம், முல்லைவாடி, நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், மஞ்சினி, வடக்குகாடு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல் மேட்டுப்பாளையத்திலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலில் கருமேகம் சூழ இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. காரமடை, சிறுமுகை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆலாங்கொம்பு, நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.